எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, April 15, 2018

உணவே மருந்து! கீரை வகைகளில் கீரைச் சுண்டல்!

அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா! அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன். முடியறதில்லை. பொதுவாக எல்லாக் கீரைச் சமையல்களும் ஒரே மாதிரி என்பதால் எல்லா வகைக்கீரையையும் சமைக்கும் விதம் குறித்துச் சொல்லப் போவதில்லை. அந்த அந்தக் கீரையின் மருத்துவ குணங்கள், பலன் பற்றி மட்டும் குறிப்பிடப் போகிறேன். போன பதிவில் கீரைப் பருப்பு உசிலி பற்றிப் பார்த்தோம். முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை உட்பட எல்லாக் கீரைகளிலும் இவ்வகைப் பருப்பு உசிலியைத் தயாரிக்கலாம். 

முதல்லே நெ.த. கேட்ட கீரைச் சுண்டல். சமீபத்தில் ஒரு ஓட்டலில் கூடச் சாப்பிட்டாலும் அதில் பூண்டு சேர்த்திருந்தார்கள். அது என்னமோ பூண்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துக்கறதே இல்லை. நெஞ்செரிச்சல் வந்துடுது! ஒரு மாதிரியாக ஏப்பம் வரும்! ஆகவே பூண்டே வெளியே சென்றால் ஓட்டல் சாப்பாட்டில் தவிர்க்க முடியாமல் சாப்பிட்டால் தான். நான் பெரும்பாலும் ஓட்டலில் சாப்பாடு சாப்பிடுவதை இதனாலேயே தவிர்ப்பேன். ஆனால் அன்று காலை ஆகாரம் சாப்பிடாத காரணத்தினால் ஒருவேளையாவது சாப்பிடணுமே என மதியம் சாப்பிட நேர்ந்தது.

எந்தக் கீரையானாலும் ஒரு கட்டு எடுத்துக் கொண்டு நன்கு அலசிக் கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொஞ்சம் பாசிப்பருப்பை எடுத்துக் கழுவிக் கொண்டு ஊற வைக்கவும். ஒரு கட்டுக்கீரைக்கு அரைக்கரண்டி பாசிப்பருப்பு போதும். தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு.

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல். தேவையானால் கொஞ்சம் போல் சர்க்கரை

கீரையையும் பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு நசுங்கும் பதம் வரும் வரை வேக வைத்துப் பின்னர் உப்புச் சேர்க்கவும்.  அதிகப்படி நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டால் தக்காளிச் சாறு சேர்த்தோ சேர்க்காமலோ மிளகுத் தூள் தூவி சூப் மாதிரிச் சாப்பிடலாம்.  கீரையை வடிகட்டிய பின்னர் அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் கொண்டு கடுகு, உபருப்பு தாளிக்கவும். மி.வத்தலைக் கிள்ளிச் சேர்க்கவும். வெந்த கீரையைப் போட்டு நன்கு கிளறவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். (எங்க வீட்டில் தேங்காய் போட்ட கறிகளுக்குச் சர்க்கரை கொஞ்சம் சேர்ப்போம்.) பின்னர் தேங்காய்த் துருவலையும் சேர்த்துவிட்டு நன்கு கிளறவும். நன்கு பொலபொலவென வந்ததும் எடுத்துப் பாத்திரத்தில் மாற்றிச் சாப்பிடும்போது பரிமாறவும்.

இதையே தேங்காய் போடாமல் தக்காளி வெங்காயம் சேர்த்தும் பண்ணலாம். தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொண்டு தக்காளியையும் சேர்த்து நன்கு தக்காளி குழையும் வரை வதக்கிப் பின்னர் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரையைச் சேர்த்து நன்கு கிளறியதும் கீழே இறக்கிப் பரிமாறவும்.  அடுத்து பாலக் பனீர் தயாரிக்கும் முறை பற்றிப் பார்ப்போம். பனீர் பையர் வருகைக்காகக் கொஞ்சம் வாங்கி வைச்சிருந்தேன். அவர் ஊருக்குக் கிளம்பும் முன்னர் கடாய் பனீர் செய்து கொடுத்தேன். ஆகவே பனீர் தீர்ந்து விட்டது. வாங்கலாம்னா நம்ம ரங்க்ஸுக்கு அது என்னமோ அலர்ஜி! :( வாங்க விட மாட்டார். என்றாலும் செய்முறை எழுதறேன். அடுத்து வரும்.

படங்கள் என்னிடம் எடுத்தது ஏதும் இல்லை. கூகிளில் தேடினால் காப்பிரைட் இருக்கிறது எனச் சொல்கிறது. ஆகவே படம் போட முடியலை! 

Friday, March 16, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்

பசலைக்கீரையைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். பாலக்கும் கிட்டத்தட்டப் பசலைக்கீரை வகைதான்! இரண்டிலுமே நீர்ச் சத்து அதிகம். நறுக்கிவிட்டு அலம்பினால் வேக விடும்போது நீர் அதிகம் சேர்க்க வேண்டாம். நான் எப்போவும் நறுக்கிட்டுத் தான் அலசுவேன். அப்போத் தான் இலை, தண்டுகளில் மண் இருந்தால் நன்கு போகும். கிட்டத்தட்ட அரிசி களைகிறாப்போல் திரும்பத் திரும்பப் போட்டு அலசும்படி இருக்கும். இந்தக்கீரைகளில் பருப்பு உசிலியும் செய்யலாம். அநேகமாய் எல்லாக் கீரைகளுக்கும் ஒரே மாதிரி செய்முறை தான். என்றாலும் ஏதேனும் ஒன்றின் செய்முறையைக் கொடுக்கிறேன்.

பசலைக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, முருங்கைக்கீரை போன்ற எல்லாக்கீரைகளுமே கூட்டு, கறி, உசிலி, பொரிச்ச குழம்பு, சாம்பார் போன்றவை செய்து சாப்பிடலாம். மணத்தக்காளிக்கீரை பற்றி ஏற்கெனவே எழுதிட்டேன். முருங்கைக்கீரையும் எழுதி இருக்கேன். இப்போ மற்றக் கீரைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு சமைக்கலாம்.

முளைக்கீரை ஒரு கட்டு! நன்கு ஆய்ந்து தண்டு பெரிசாக இருந்தால் நீக்கிவிட்டு நறுக்கிக் கொள்ளவும். நன்கு அலசி வடிதட்டில் போட்டு வைக்கவும். கல்சட்டி, அல்லது உருளி அல்லது ஏதேனும் அடி கனமான பாத்திரத்தில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றிக் கொண்டு அலசி வைத்திருக்கும் கீரையைப் போடவும். கீரையை வேகவிடும்போது கட்டாயமாய் மூடக் கூடாது. கீரை நன்கு வெந்து குறைந்து விடும். அளவு குறையும். அப்போது உப்புச் சேர்த்தால் போதும். முதலிலேயே உப்புச் சேர்த்தால் கீரை நிறைய இருப்பதைப் பார்த்து உப்பும் கூடப் போகும். நான் பொதுவாக மசித்த பின்னரே உப்பைச் சேர்ப்பேன். அப்போத் தான் உப்பு அளவு சரியாக வரும். கீரையை மசித்த பின்னர் பெருங்காயம் சேர்க்கும் வழக்கம் இருந்தால் சேர்க்கலாம். சிலர் ஜீரகம் பச்சையாகச் சேர்ப்பார்கள். கீரை மசிந்து நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டுச் சூட்டோடு வைத்திருந்தால் சாப்பிடும்போது நன்கு இறுகி மசியல் பதமாக இருக்கும். மாவு எல்லாம் கரைத்து விடும் தேவை இல்லை.

மேலே சொன்னது வெறும் மசியல்! அதற்குத் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிவத்தல் தாளிக்கலாம். என் அம்மா வீட்டில் கடுகு, உபருப்போடு மோர் மிளகாய், குழம்புக் கருவடாம் தாளிப்பார்கள். அதுவும் தனி சுவையைக் கொடுக்கும். சிலர் வெறும் தேங்காய்த் துருவலைத் தே. எண்ணெயில் பிரட்டிக் கொடுத்துச் சேர்ப்பதும் உண்டு. இவை எல்லாம் வெறும் கீரை மசியலுக்கு.

கீரையை மசித்த பின்னர் அதை வேறு சுவையாகத் தயாரிக்கணும்னா தேங்காய் சேர்த்து ஜீரகம், மிவத்தல் போட்டு அரைத்துச் சேர்க்கலாம். ஒரு கொதி விட்ட பின்னர் தே. எண்ணெயில் கடுகு, உபருப்பு தாளிக்கலாம். அல்லது தேங்காயோடு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கலந்து ஒரு கரண்டி புளிக்காத மோர் அல்லது தயிர் சேர்க்கலாம். இதை மோர்க்கீரை என்போம். வத்தல்குழம்போடு நல்ல துணை இந்த மோர்க்கீரை!

இதைத் தவிரவும் பாசிப்பருப்புச் சேர்த்து மொளகூட்டலும் செய்யலாம். மொளகூட்டல் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன். புளிக்கீரையும் இரு விதங்களில் செய்யலாம். பருப்புச் சேர்த்து ஒரு முறை. பருப்புச் சேர்க்காமல் இன்னொரு முறை. இரண்டுமே நன்றாக இருக்கும். கீரையை நறுக்கிக் கொண்டு நன்கு அலசி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைத்து விட்டுப் பின்னர் உசிலிக்குச் சேர்க்கலாம்.

பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள்:

து.பருப்பு ஒரு கிண்ணம், அரைக்கிண்ணம் க.பருப்பு நன்கு ஊற வைத்துக் களைந்து கொண்டு உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும். இதோடு நறுக்கி வைத்திருக்கும் கீரையைக் கலக்கவும். இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டில் இலையைப் போட்டு அல்லது தட்டில் எண்ணெய் தடவிக் கொண்டு பருப்பு உசிலிக்கலவையைப் பரப்பவும். வேக விடவும்.  பின்னர் தே எண்ணெயில் கடுகு, உபருப்பு தாளித்துக் கொண்டு வேக விட்ட கலவையைப் போட்டு உதிர்க்கவும். எல்லாக் கீரைகளிலும் இப்படிப் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.

Tuesday, February 20, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்

பசலைக்கீரை மசியல்: தேவையான பொருட்கள்

பசலைக்கீரை ஒரு கட்டு

உப்பு தேவைக்கு

ஜீரகம் ஒரு டீஸ்பூன்   , பெருங்காயம் சின்னத் துண்டு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல்.

பசலைக்கீரையைப் பொடியாக நறுக்கி நன்கு அலசவும். கீரையை அலம்பிவிட்டு நறுக்குவது கொஞ்சம் கஷ்டம். ஆகவே நறுக்கிய பின்னர் அலம்பலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அரிசி களைவதைப் போல் நிறைய தண்ணீர் ஊற்றி அலசவேண்டும். பின்னர் அதை வடிகட்டி நீர் சேர்க்காமல் கல்சட்டி, உருளி அல்லது சமைக்கும் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். கீரையைச் சமைக்கும்போது அது எந்தக் கீரையாக இருந்தாலும் மூடிய பாத்திரத்தில் வேக வைக்க வேண்டாம். அப்படி வேக வைத்தால் கீரையிலுள்ள ஒருவிதமான உப்புக்கலந்த நச்சுக்காற்று வெளியேறாமல் கீரையிலேயே தங்கிவிடும்.

கீரை நன்கு வெந்த பின்னர் ஜீரகத்தைப் பச்சையாகக் கைகளால் தேய்த்துச் சேர்க்கவும். உப்பையும் பெருங்காயத்தையும் சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்துக் கீரை மத்தால் மசித்தால் கீரை நன்கு மசிந்து விடும். நீர் இருந்தால் நீர் வற்றும் வரைக்கும் கீரையைக் கொதிக்கவிடவும். பின்னர் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல் தாளித்துக் கீரையில் சேர்க்கவும். துருவிய தேங்காய்த் துருவல் இருந்தாலும் சேர்க்கலாம். இது பொதுவாக எந்தக்கீரை மசியலுக்கும் இதே குறிப்பில் செய்யலாம்.

பசலைக்கீரைக் கறி அல்லது பொரியல்!

கீரை ஒரு கட்டு

உப்பு தேவையான அளவுக்கு

பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (ஊற வைக்கவும்)

தாளிக்க

தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல், தேங்காய்த் துருவல்

வெங்காயம்(தேவைப்பட்டால்) பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொண்டு பொடியாக நறுக்கிய கீரையுடன் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும். முதலிலேயே உப்பைச் சேர்த்தால் கீரை நிறம் மாறி விடும். கீரை வெந்ததும் அதில் உள்ள நீரை வடிகட்டவும். அந்த நீரைக் கொட்ட வேண்டாம். சாம்பாருக்குப் புளி கரைக்கப் பயன்படுத்தலாம். அல்லது அந்த நீரில் மிளகு, சீரகப் பொடி கலந்து சூப் மாதிரி குடிக்கலாம்.

கடாயில் தேங்காய் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிவத்தல் தாளிக்கவும். வடிகட்டி வைத்திருக்கும் கீரையைப் போட்டு நன்கு கிளறவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கலாம். (விருப்பம் இருந்தால்) பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறிய பின்னர் கீழே இறக்கவும்.

வெங்காயம் போடுவதெனில் கடுகு, உபருப்பு தாளித்த பின்னர் வெங்காயத்தையும் மிவத்தலையும் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு கீரையைச் சேர்க்கவும். இதற்குத் தேங்காய்த்துருவல் போடாமலும் இருக்கலாம். அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது!

பசலைக்கீரைக் குழம்பு/சாம்பார்! புளி சேர்த்தது.

தேவையான சாமான்கள்

பசலைக்கீரை ஒரு சின்னக் கட்டு! நன்கு கழுவிக் கொண்டு பொடியாக நறுக்கிக் கொண்டு கடாய் அல்லது கல்சட்டி அல்லது உருளியில் கீரையை வேக விடவும்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு இரண்டு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு குழைந்தது ஒரு சின்னக் கிண்ணம்

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவுக்கு

பெருங்காயம்

தாளிக்க தே.எண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய்

கடுகு, வெந்தயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு சின்ன மி.வத்தல்

கல்சட்டியில் வெந்து கொண்டிருக்கும் பசலைக்கீரையை ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைச் சேர்க்கவும். மசித்த கீரையில் புளி ஜலத்தைச் சேர்த்துக் கொண்டு சாம்பார்ப் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது வெந்த துவரம்பருப்பையும் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்கவிட்டுத் தேங்காய் எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். சூடான சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். 

Sunday, February 18, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்!

ஏற்கெனவே வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை பார்த்துட்டோம். ஆனாலும் இப்போப் பார்க்கப் போவது நாம் அன்றாடப் பயன்பாட்டில் வரும் கீரை வகைகளான முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, பசலைக்கீரை, பாலக் கீரை போன்றவை. பாலக்கும் பசலையும் ஒன்றே என்று சிலர் சொன்னாலும் பசலைக்கீரைத் தண்டு கொஞ்சம் அடர் சிவப்பாகவே இருக்குனு நினைக்கிறேன்.

Image result for பசலைக்கீரை     இது பசலைக்கீரை, தானாகவே தோட்டங்களில் காணப்படும். நல்ல காய்ச்சல் இருப்பவர்களுக்கு இதைச் சமைத்துக் கொடுப்பார்கள். தரையிலும் படரும். கொடியாகவும் படர்ந்து மேலேறிச் செல்லும். குத்துச் செடியாகவும் காணப்படும். ஶ்ரீலங்காவில் அதிகம் காணப்படும் இதை சிலோன் கீரை என்றும் சொல்வார்கள். இதன் பூர்விகம் அமெரிக்கா என்று சொல்லப்பட்டாலும் எங்கு வேண்டுமானாலும் வளரும். தண்டைக் கிள்ளி நட்டால் போதும்! தானாக முளைக்க ஆரம்பிக்கும்.

Image result for பாலக் கீரை

இது பாலக் கீரை! இரண்டுமே ஆங்கிலத்தில் ஸ்பினாச் என்றே அழைக்கப்படுகிறது. இதுவும் பசலைக்கீரையின் குடும்பத்தைச் சேர்ந்ததே இதன் இலைகள் வட்டமாகவும் பச்சையாகவும் காணப்படும். இரண்டுமே மருத்துவ குணம் நிரம்பியவை!

பெரிய அளவில் வைடமின்கள் நிறைந்திருப்பதோடு இரும்புச் சத்தும் தேவையான அளவுக்கு இருக்கிறது.  தொற்று நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்து விடும். அவற்றை எதிர்க்கும் ஆற்றல் இந்தக்கீரைகளில் உண்டு. இவற்றில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நறுக்கி வேக விடும்போது அதிகத் தண்ணீர் சேர்க்கக் கூடாது! பார்வைக்கோளாறைச் சரி செய்வதோடு ரத்த விருத்தியையும் ஏற்படுத்தும். கொழுப்புச் சத்தே இல்லாததால் எளிதில் செரிமானம் ஆகிவிடும். குளிர்ச்சி தருவதோடு உடலுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். எரிச்சல், பித்தம் போன்றவைக்கு நல்லது. 

இதை நீர் விட்டுச் சமைத்தால் கீரையில் மிகுதியாக இருக்கும் நீரைக் கீழே கொட்டாமல் அதில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டு சூப் மாதிரிக் குடிக்கலாம். அல்லது மிளகு, பூண்டு சேர்த்து இந்த நீரை விட்டு அரைத்து ரசத்தில் கலக்கலாம். இளம் கீரைகளை நறுக்கி வதக்கிப் பச்சடி போல் செய்யலாம். பருப்புக்களுடன் சேர்த்துக் கடைந்து சாப்பிடலாம். நல்ல மலமிளக்கியாகவும் செயல்படும்.  நீரிழிவுக்காரர்கள் தினம் ஒரு கீரை என்னும் விதத்தில் வாரம் ஒரு முறை இந்தக்கீரையையும் சமைத்துச் சாப்பிடலாம்.  உடலில் ரத்தக்குறைவு இருந்தால் அதைச் சமன் செய்துவிடும் இந்தக்கீரை!  கால்களில், விரல்களில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும் பெரிய அளவில் இந்தக்கீரை பயன்படும். தொண்டைப்புண்ணும் இந்தக்கீரையின் நீரை வடிகட்டிக் குடிப்பதால் சரியாகும்.

குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே கீரையைச் சமைத்துக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். முக்கியமாக இளம்பெண்களுக்குக் கீரையை தினம் சேர்த்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும். 

Wednesday, January 24, 2018

உணவே மருந்து! கருகப்பிலை! 2

கறிவேப்பிலைக் குழம்பு!

கறிவேப்பிலை அல்லது கருகப்பிலை இரண்டு, மூன்று கைப்பிடி! ஆர்க்கு என்று சொல்லப்படும் குச்சியில் சத்து நிறைய இருப்பதால் நான் அதை வீண் செய்ய மாட்டேன். எல்லோரும் உதிர்த்து இலையாக வைத்துக் கொண்டால் நான் தலைகீழ்! அந்த ஆர்க்கோடு பொடியாக நறுக்கிச் சேர்ப்பேன். அப்படி நறுக்கிச் சேர்த்த கருகப்பிலை ஒரு கிண்ணம் நிறைய!

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு

வறுத்து அரைக்க:-

மிளகு ஒரு டீஸ்பூன் (மிளகு பிடிக்கும்னால் இரண்டு டீஸ்பூன்)

மி.வத்தல் 2 அல்லது மூன்று. மிளகு பிடிக்காதவங்க மிளகைக் குறைத்துக் கொண்டு மிவத்தல் நான்கு, ஐந்து வரை வைச்சுக்கலாம்.

பெருங்காயம்! ஒரு துண்டு (பெரும்பாலும் பெருங்காயம் சேர்க்க மாட்டாங்க, ஆனால் நான் சேர்க்கிறேன்.)

வறுக்க ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்

உப்பு தேவையான அளவுக்கு

நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்கக் கடுகு, மஞ்சள் பொடி (தேவையானால்)

புளியைக் கரைத்துக் கொண்டு வடிகட்டித் தயாராக வைக்கவும்.  அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஒவ்வொன்றாக வறுத்து எடுக்கவும். கடைசியில் அந்தக் கடாயிலேயே ஆய்ந்து வைத்த கருகப்பிலையையும் போட்டுப் புரட்டி எடுக்கவும். ஆற விட்டுப் பின்னர் நல்ல விழுதாக நைசாக அரைக்கவும். கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலில் போட்டுக் கரைக்கவும். மிக்சியை அலம்பியும் ஜலத்தை விட்டுக் கொள்ளலாம். உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு தாளிக்கவும். விரும்பினால் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும். இல்லை எனில் கரைத்து வைத்துள்ள குழம்புக்கலவையை மெதுவாக ஊற்றவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது கீழே இறக்கி வைக்கவும். சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிடச் சுவை! மோர்க்கூட்டு, மோர்க்கீரை, தயிர்ப்பச்சடி நல்ல துணை!

கருகப்பிலைத் துவையல்:- இதை இரண்டு முறையில் அரைக்கலாம். ஒன்று சாதாரண நாட்களில் செய்வது! இன்னொன்று ச்ராத்தம் போது செய்வது!

மி.வத்தல் 4

கடுகு, உபருப்பு தலா ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

புளி ஒரு சுண்டைக்காய் அளவுக்கு நீரில் ஊற வைக்கவும்

உப்பு தேவையான அளவு

நல்லெண்ணெய் வறுக்க

நல்லெண்ணெயைக் கடாயில் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு முதலில் வறுத்துத் தனியாக வைக்கவும். பின்னர் மி.வத்தல், பெருங்காயம் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு அதிலேயே கருகப்பிலையையும் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஆற விட்டு மிக்சி ஜாரில் முதலில் புளியுடன்,   மி.வத்தல் உப்பு, பெருங்காயம், கருகப்பிலையைப் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு பின்னர் கடுகு, உபருப்புச் சேர்த்துக் கொரகொரவென்று அரைத்து எடுக்கவும். தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

ச்ராத்தத்தின் போது செய்யும் கருகப்பிலைச் சட்னி

கருகப்பிலை, இஞ்சி சுமார் 25 கிராம், உப்பு, புளி, கடுகு, உபருப்பு (வறுத்தது)

வெறும் வாணலியில் கருகப்பிலையை வறுத்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு வறுத்து எடுத்துக் கொண்டு இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கிக் கொண்டு இவை ஆறியதும் உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கடைசியில் தாளிதத்தைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுக்க வேண்டும்.

கருகப்பிலைப் பொடி! கருகப்பிலை சுமார் 100 கிராம். நன்கு காய வைக்கவும்.

மி.வத்தல் 5 அல்லது ஆறு

உப்பு,

ஓமம் அல்லது பெருங்காயம்

கருகப்பிலையை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த வாணலியிலேயே மி.வத்தலையும் போட்டுக் கருகாமல் வறுத்துக் கொண்டு ஓமத்தையும் போட்டு வறுக்கவும். பெருங்காயம் தேவையானால் சேர்க்கலாம். எல்லாம் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும். சுமார் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.


Tuesday, January 9, 2018

உணவே மருந்து! கறிவேப்பிலை!

Image result for கறிவேப்பிலை

படத்துக்கு நன்றி கூகிளார்.

கறிவேப்பிலையை வளர்ப்பதே பெரிய விஷயம்!  கறிவேப்பிலைக் கன்னு மாதிரி ஒரே பெண்! அல்லது ஒரே பையர்! என்று சில பெற்றோர் சொல்வதில் இருந்து கறிவேப்பிலைக் கன்று வளருவதற்கு நாம் படும் கஷ்டமும் புரியும்! உணவில் வாசனைக்காக மட்டுமில்லாமல் அதன் மருத்துவ குணத்துக்காகவுமே கறிவேப்பிலை பயன்படுத்தப் படுகிறது. பொதுவாகக் கறிவேப்பிலையை எந்த உணவில் போட்டாலும் நாம் அதை எடுத்து எறிந்துவிட்டே சாப்பிடுகிறோம். ஒரு சிலர் தாங்கள் பிறருக்குப் பயன்படும் வரை உதவி செய்த பின்னர் அவர்கள் தங்களைக் கவனிக்காமல் இருப்பதைக் குறித்துச் சொல்லும்போது, "கறிவேப்பிலையைப் பயன்படுத்துகிற மாதிரி அவங்க தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டாங்க! அப்புறமாத் தூக்கி எறிஞ்சுட்டாங்க!" என்று சொல்வது உண்டு.

ஆனால் அந்தக் கறிவேப்பிலையைப் பச்சையாக நாம் தினம் சாப்பிட்டு வருவதில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டிருக்கிறோமா? கறிவேப்பிலை சாப்பிடுவதால் தலை மயிர் வளரும் என்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரம் நரைக்கவும் நரைக்காது! அதோடு காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலைக் கொழுந்துகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமானால் ஏற்படும் நன்மைகள்:-

இதில் ஏ விடமின், பி, பி2, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்துகள் இருக்கின்றன.  இந்தக் கறிவேப்பிலையைப் பச்சையாகத் தினம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். வயிற்றைச் சுற்றி இருக்கும்மடிப்புகள் எல்லாம் கரைந்து போய் வயிறு சாதாரணமாகக் காட்சி அளிக்கும். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்கப் பேரிச்சையோடு கறிவேப்பிலையைக் காலை நேரத்தில் உண்ண வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவு சீராக இருக்கத் தினமும் காலைவேளையில் கறிவேப்பிலைக் கொழுந்துகளை மென்று தின்னலாம். தலையில் மயிர் வளரவும் கறிவேப்பிலைபயன்படும். கறிவேப்பிலையைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொண்டு தினம் ஒரு டீஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிகட்டிக் கொண்டு அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். கறிவேப்பிலை கல்லீரலுக்கும் பாதுகாப்புக் கொடுக்கும்.

வயிற்றுப் போக்கு சமயத்தில் கறிவேப்பிலையுடன், இஞ்சி, சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொண்டு ஒரு லிட்டர் மோரில் இந்துப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் போக்கும் குறையும். அதே சமயம் வாய் ருசியில்லாமல் இருந்தால் அதுவும் சரியாகும். மூல நோய்க்குக் கூடக்கறிவேப்பிலை சிறந்த மருந்தாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ச் சிக்கல்களுக்கும் கறிவேப்பிலைச் சாறு நல்ல பலன் அளிக்கிறது. இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொஞ்சம் உப்புடன் உட்கொண்டால் நல்லது.  புற்று நோய்க்காக எடுத்துக்கொள்ளும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் கறிவேப்பிலையை உணவில் தாராளமாகச் சேர்க்கலாம் என்கின்றனர். இதன் மூலம் சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறையும் என்கின்றனர்.  உடலில் ஏற்படும் நோய்த் தொற்றையும் குணமாக்கும். கண் பார்வையைச் சீராக்கும்.

Saturday, December 30, 2017

உணவே மருந்து! புதினா!

புதினாத் துவையல்: ஒரு கட்டுப் புதினா! நிறையப் பேர்ன்னா ஒரு கட்டு பத்தாது. ஆய்ந்து வதக்கினால் கொஞ்சமா ஆகி விடும். ஆகவே அதற்குத் தகுந்தாற்போல் எடுத்துக்கவும். இங்கே இரண்டே பேர்களுக்கான அளவைச் சொல்லி இருக்கேன்.

புதினா ஒரு கட்டு

மிளகாய் வற்றல் நான்கு(காரம் அதிகம்னால் இரண்டே போதும்.)

புளி ஒரு சின்ன அரிநெல்லிக்காய் அளவுக்கு எடுத்து ஊற வைத்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு

கடுகு, உ.பருப்பு, ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

வதக்க நல்லெண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை எண்ணெயில் எல்லாம் வதக்கினால் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகவே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு வறுத்துக் கொண்டு தனியாக வைக்கவும். பின்னர் மி.வற்றலைப் போட்டுக் கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். புதினாக்கட்டை நன்கு பிரித்து ஆய்ந்து கழுவி நீரை வடிய விட்டு எண்ணெயில் போட்டு நன்கு சுருள வதக்கவும். எல்லாம் ஆறினதும் மிக்சி ஜாரில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், புளி போட்டு முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் வதக்கிய புதினாவைப் போட்டு அரைக்கவும். எடுக்கும்போது வறுத்த கடுகு, உபருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுத்துவிடவும். கரகரவென இருக்கட்டும். சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்

புதினா சட்னி

புதினா ஒரு கட்டு

பச்சை மிளகாய் நான்கு அல்லது ஆறு காரத்திற்கு ஏற்றாற்போல்

இஞ்சி ஒரு துண்டு

உப்பு

எல்லாவற்றையும் நன்கு கழுவிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். இதற்குப் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். விருப்பம் எனில் சேர்க்கலாம். இதைக் கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டு சாட் செய்யும் நாட்களில், பானி பூரி சாப்பிடும் நாட்களில், பேல்பூரி கலந்தால் அப்போது இரண்டு ஸ்பூன் சட்னிக்குக் கால் கப் நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதன் மேல் ஊற்றிக் கொண்டு இனிப்புச் சட்னியும் சேர்த்துச் சாப்பிடலாம். தயிர் வடை வட இந்திய முறையில் பண்ணுவதற்கும் இதை விட்டுக் கொள்ளலாம்.

புதினாவோடு காய்களையும் சேர்த்து வதக்கிக் கொண்டு சப்பாத்திக்கு சைட் டிஷ் பண்ணலாம்.

புதினா ரைஸுக்குப் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினாவை உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்/ சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை தாளித்துக் கொண்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதற்குத் தக்காளி வேண்டாம். வெங்காயம் பாதி வதங்குகையில் அரைத்த விழுதைப்போட்டுக் கிளறவும். நன்கு எண்ணெய் பிரிந்ததும் சாதத்தை அதில் சேர்த்து மெதுவாகக் கிளறிக் கொண்டே நன்கு கலக்கவும்.  உப்புப் பார்த்துக் கொண்டு தேவை எனில் கொஞ்சமாய் உப்புச் சேர்க்கவும். இதற்குப் பச்சைப் பட்டாணியாகக் கிடைத்தால் வாங்கித் தோலுரித்துச் சுத்தம் செய்து வெங்காயம் வதக்குகையில் கூடப் போட்டு வதக்கிச் சேர்க்கலாம். காய்ந்த பச்சைப்பட்டாணியைச் சேர்ப்பது எனில் முதல் நாளே ஊற வைத்துவிட்டு மறுநாள் சாதம் வடிக்கையில் அதோடு சேர்த்து வேகவிட்டு எடுத்துக் கொள்ளலாம். பூண்டு பிடிக்காதவர்கள் புதினா அரைக்கையில் பூண்டு சேர்க்காமல் இஞ்சி மட்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.