எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, November 15, 2011

ரங்கு சமையல் கத்துக்கிறார்

அப்பாடா!

என்ன அப்பாடா! இன்னிக்கு சமையல் இல்லையா?

நோ, இன்னிக்கு நோ சமையல் டே. தங்குவின் அறிவிப்பு.

என்னது? அப்போ என்ன சாப்பிடப் போறோமாம்?

பட்டினி தான்!

அடிப் பாவி! சரி, நானாவது சமைத்துத் தொலைக்கிறேன்.

அப்படி வாங்க வழிக்கு! ஹாஹாஹாஹா, தங்குவின் வெற்றிச் சிரிப்பு.

நான் வெறும் ரசம் தான் வைக்கப் போறேன். ரங்குவின் அறிவிப்பு.

சரி, போகட்டும், வைக்கிறது வைக்கிறீங்க, மைசூர் ரசமா வைச்சுடுங்களேன்.

நல்லா நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துட்டா பாரு!

ஏன்? தினம் தினம் நான் தானே சமைக்கிறேன். இன்னிக்கு ஒரு நாள் செய்தா என்னவாம்?

எனக்கு மைசூர் ரசமும் தெரியாது, மங்களூர் போண்டோவும் வராது.

நான் சொல்லித் தரேன். செய்ங்க. தங்கு ஓர் அதட்டல் போட வேறு வழியில்லாத ரங்கு பணிகிறார்.

முதல்லே பருப்பை வேக வைக்கணும். அது பாட்டுக்கு வேகட்டும். அதுக்குள்ளே நாம் இதெல்லாம் தயார் பண்ணிக்கலாம்.

என்னது?

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சுக்குங்க. அதைத் தனியா வைங்க, சரியா?

சரி, சரி, அப்புறமா சொல்லித் தொலை. அடம்!

மி.வத்தல் 4, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கோங்க. ஜீரகம் வறுக்காமல் பச்சையாக எடுத்து வறுத்த சாமான்களோடு சேர்த்துக்கோங்க.

ஐயையே, வறுக்கச் சொன்னால் என்ன செய்யறீங்க? இப்படியா கறுப்பா ஆக்கறது? நகருங்க நானே வறுத்துத் தந்து தொலைக்கிறேன்.

நல்லா வறு, என்னை வறுக்கிறாப்போல் நினைச்சுக்கோ!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே நீங்க தான் என்னை வறுக்கிறீங்க.

தங்குவே எல்லாவற்றையும் வறுத்து எடுத்தாச்சு.

இப்போ இதை எல்லாம் மிக்சியில் போட்டு அரைங்க.

எப்படி? எங்க வீட்டு மனுஷங்களை நீ வாயில் போட்டு அரைப்பியே, அப்படியா?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சரி, சரி,அரைச்சுட்டேன், இதோ.

இப்போப் புளி ஜலத்தை அடுப்பில் வைச்சு அதிலே ஒரு தக்காளிப்பழத்தை நறுக்கிப் போடுங்க. உப்புச் சேர்த்துக் கொஞ்சம் போல் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடுங்க. வேணுமானால் ஒரே ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடலாம். கொதி வந்ததும், வெந்த பருப்பைச் சேர்த்துட்டு, அரைச்சு வைச்சதையும் சேர்த்து ஒரு கொதி விடுங்க. அப்புறமா ஜலம் விட்டு விளாவிவிட்டு நெய்யில் கடுகு, மி,வத்தல் ஒண்ணு, கருகப்பிலை தாளிச்சு, கொத்துமல்லி நறுக்கிப் போடுங்க.

அப்பாடா, எல்லாம் முடிச்சுட்டேன். வா, சீக்கிரமா வந்து படம் எடுத்துட்டு நீ எழுதுவியே அதிலே போடு.

அதெல்லாம் நான் சமைக்கிறச்சே தான். இதை எல்லாம் எடுக்க மாட்டேன்.

6 comments:

  1. ஹ ஹா !

    நல்லா ரசம் வைக்கராங்கப்பா :)) குறித்து கொண்டோம் !!

    இங்கேயும் க்ர்ர்ர்ரர்ர்ர்ர் வந்துடுச்சே!!

    ReplyDelete
  2. ஹாஹா, நடுவிலே க்ர்ர்ர்ர்ர் :P :P போட முடியாமல் கொஞ்சம் பிரச்னைகளாய் இருந்தது. இப்போத்தான் சரியாயிட்டு வருது. அதனால் ஜாஸ்தியாவே இருக்கும். :))))))

    ReplyDelete
  3. ஆகா ரங்கு + தங்கு சமையல் அருமை.:))))

    ReplyDelete
  4. வாங்க மாதேவி, வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. ரங்கு ரசம் நல்லாவே இருக்கும்ணு தோணுதே.. தங்கு நை நைனு குறுக்க வராம இருந்தா?

    ReplyDelete