எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, March 2, 2012

வாழைத்தண்டில் சாலட் சாப்பிட வாருங்கள்

ஶ்ரீராம் வாங்கி பாத் பத்திக் கேட்டிருக்கார். அதை எழுதும் முன்னர் ஒரு சில சாலட் வகைகளைப் பார்ப்போம். நான் சொல்லப்போவது எல்லாமே மிக எளிமையாகத் தயாரிக்கக்கூடியவையே. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம். சாலட் ஆயில் அல்லது சீஸ் அல்லது மயோனைஸ், வித விதமான சாஸ் என எதுவும் தேவையில்லை. அதெல்லாம் இல்லாமலேயே வெறும் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு, பச்சைக்கொத்துமல்லி இருந்தால் போதுமானது. முதலில் வாழைத்தண்டு சாலட்.

வாழைத்தண்டைக் கறியாகவோ அல்லது கூட்டாகவோ சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள் ஒரு முறை அதைப் பொடிப் பொடியாக நறுக்கித் தயிரில் சேர்த்துக் கடுகு, ப.மி. பெருங்காயம் தாளித்து உப்புச் சேர்த்துப் பச்சடியாகச் சாப்பிட்டலாம். இம்முறையில் வாழைத்தண்டின் பயன்களை உடனடியாகப் பெறலாம்.

அடுத்து சாலட்.

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. மிளகுத் தூள் கால் டீஸ்பூன் அல்லது ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க கடுகு, பச்சைக் கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன். பாசிப்பருப்பைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.

நல்ல மொந்தன் வாழைத்தண்டாகவும் அடித்தண்டாகவும் இருந்தால் நல்லாத் தான் இருக்கும். மார்க்கெட்டில் கிடைப்பதைத் தானே வாங்க முடியும்ங்கறீங்களா? சரி, வாங்கினதை நன்றாகத் தோல் சீவிக் கொண்டு மெலிதாக வட்டமாக நறுக்கி நாரையெல்லாம் பிரித்து எடுத்து விடவும். (டிப்ஸ்: வாழைத்தண்டு நாரைச் சேர்த்து வைத்துக்கொண்டால் சுவாமி விளக்குத் திரியாகப் பயன்படுத்தலாம்.) வட்டமாக நறுக்கிய வில்லைகளை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டு பாசிப்பருப்போடு சேர்க்கவும். இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

கவனிக்கவும்: இஞ்சியைத் தோல் சீவிப் பயன்படுத்துங்கள். சுக்கைத் தோலோடு பொடி செய்யுங்கள். அதன் பலன் அப்போது தான் முழுமையாகக் கிடைக்கும். அதோடு இரவில் இஞ்சி, சுக்கு வேண்டாம். கடுக்காய் தான் படுக்கப் போகையில் சாப்பிடலாம்.

நறுக்கியவற்றில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கலக்கிவிட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு விருப்பமெனில் பெருங்காயத் தூள் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.

6 comments:

  1. வாழைத் தண்டு சாலட் வாரத்தில் ரெண்டு நாள் என் காலை ஆகாரம்...ஓட்ஸ் (மோர், பெருங்காயம், உப்புக்) கஞ்சியுடன்...! வெறும் வாழைத் தண்டு, கொ. மல்லி, லே...ஸாக உப்பு, எ.சாறு! மற்ற நாட்களில் ஒரு நாள் கேரட், எ.சாறு, வெள்ளரி மி. தூள் ஒருநாள், கோஸ் ஒருநாள்...! வெந்தயம், கொள், பயறு முளை கட்டி...! பத்து நாளைக்கொரு தரம் முள்ளங்கி...எல்லாம் பச்சைக் காய்கறிகளே...காதுகள் நீண்டு முயலாகவில்லை இன்னும் என்று உறுதி செய்து கொள்வேன்! :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், ஹிஹிஹி, முயல் எல்லாம் கண்ணாடி போட்டுக்காது; ஆனால் இதை எல்லாம் சாப்பிட்டும் நான் கண்ணாடி போட்டுக்க வேண்டி இருக்கு. :))))))

      Delete
  2. வாழைத்தண்டு + பாசிப்பருப்பு சலட் புதிதாக இருக்கின்றது. செய்து பார்க்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க மாதேவி. நன்றி.

      Delete
  3. அவர் கடைல வாங்கறதை அப்படிச் சொன்னார். வாங்கி பாத்னு.. நீங்க சாலட் பத்தி சொல்றீங்க.. கடைசில வாங்கலையா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, அப்பாதுரை, வாங்கிட்டேன். வரும் கொஞ்ச நாட்களில்.

      கூகிள் என்னமோ ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்திருக்கே! ஒவ்வொரு கமெண்டுக்கும் கீழே ரிப்ளை ஆப்ஷன் வருது! :)))))

      Delete