எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 15, 2012

கஷாயம் சாப்பிட வாங்க!

நம்ம நாட்டில் பருவ மழை ஆரம்பிச்சிருக்கு. சில நாடுகளில் கடும் குளிர்.  சில நாடுகளில் குளிர் முடியும் நேரம்.  ஆக இந்தச் சீதோஷ்ணம் ஒத்துக்காமல் பலருக்கும் ஜுரம், தலைவலினு வருது.  உடம்பு வலியும் இருக்கும் பலருக்கும். அவங்க எல்லாம் மிளகு கஷாயம் வைச்சுச் சாப்பிட்டால் உடல்வலி சரியாகும், மிளகு விஷத்தை முறிக்கக் கூடியது.  ஏதேனும் பூச்சி கடித்ததாகச் சந்தேகப் பட்டால் ஏழு அல்லது ஒன்பது மிளகை அப்படியே வாயில் போட்டுக் கடித்து மென்றால் மிளகுக் காரம் நம் நாக்கில் உணர்ந்தால் விஷக்கடி இல்லை எனவும், மிளகுக் காரம் நாக்கில் உணரப்படவில்லை எனில் விஷக்கடி எனவும் தெரிந்து கொள்ளலாம். விஷக்கடிக்கு உடனடி முறிவாகவும் செயல்படும்.

கஷாயம் வைக்க ஒரு டீஸ்பூன் மிளகு, சுக்கு ஒரு சின்னத் துண்டு தனியா கொஞ்சம் போல. மூன்றையும் வெறும் சட்டியில் வறுக்கவும் நன்கு பொடியாக்கவும்.  மூன்று கப் தண்ணீரில்  இந்தப்பொடியைப்போட்டுக் கொதிக்க வைக்கவும்.  ஒரு கப்பாக வற்ற வேண்டும். பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது அது கிடைக்காதவர்கள் தேன் விட்டுச் சாப்பிடலாம்.

தூதுவளைக் கஷாயம்:  இது ஏற்கெனவே சொல்லி இருக்கேன் என்றாலும் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.

தூதுவளை ஒரு கைப்பிடி, துளசி ஒரு கைப்பிடி, புதினா ஒரு கைப்பிடி, இஞ்சி ஒரு துண்டு.

நான்கு கப் தண்ணீரில் இவற்றை நன்கு அலசிக் கழுவிப் பொடியாக நறுக்கிப் போட்டுக் கொதிக்க வைக்கவும்.  ஒரு கப்பாக வற்றியதும் தேன் கலந்து சாப்பிடவும்.

அடுத்து இஞ்சிச் சுரசம்: தனியா ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி தோல் சீவிப் பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், சோம்பு ஒரு டீஸ்பூன், புதினா(தேவை எனில்) பொடியாக நறுக்கி 2 டேபிள் ஸ்பூன்.  எலுமிச்சைச் சாறு அரை மூடி.

எல்லாவற்றையுக் கழுவி மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.  அரைத்த சாறை வடிகட்டவும்.  மீண்டும் ஒரு முறை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும்.  அரைக்கும் கலவையில் இனி சாறு வராது எனத் தெரிந்ததும் நிறுத்திக் கொண்டு எலுமிச்சைச் சாறு கலந்து தேன் விட்டுச் சாப்பிடவும்.  குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் அருந்தலாம். வயிறு உப்புசம், வாயில் ருசியின்மை, பசி இன்மை, ஜீரண சக்தி குறைந்தால் எல்லாவற்றுக்கும் நன்மை பயக்கும்.

Sunday, June 3, 2012

இட்லிக்கு ஏற்ற காம்பினேஷன் கொத்சா, சாம்பாரா? ஒரு பட்டி மன்றம்

கொத்சைப் பற்றி அப்பாதுரை எழுதி இருந்ததைப் படித்தேன்.  அவர் பார்த்த/கேட்ட/ருசித்த கொத்சு கிட்டத்தட்ட சாம்பாரின் மறு பிறவியே.  ஒரிஜினல் நயம் கொத்சு இங்கே கொடுக்கப் படும். இட்லி, பொங்கல், அரிசி உப்புமா,  ரவா, சேமியா கிச்சடிகளோடும், சிதம்பரம் சம்பா சாதத்தோடும் ருசிக்கலாம், வாங்க.

கீழே கொடுப்பவை எல்லாம் நான்கு பேருக்கானது. முதலில் பார்க்கப் போவது வெங்காயம் போடாத கொத்சு.

முதலில் காய்கள் போட்ட கொத்சு:  கத்திரிக்காய் நடுத்தரமான அளவில் நான்கு, முருங்கைக்காய் ஒன்று, பீன்ஸ் ஒரு கைப்பிடி, காரட் பெரிதாக ஒன்று, பறங்கிக்காய் ஒரு துண்டு, செளசெள சின்னதாக ஒன்று. காய்களைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பச்சைக் கொத்துமல்லி.

புளி எலுமிச்சை அளவு நீரில் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு ஒரு கிண்ணம் நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும். உப்பு தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: மி.வத்தல் ஆறு, தனியா அரைக்கிண்ணம், கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, வெந்தயம் ஒரு டீஸ்பூன். தேங்காய் சேர்க்கக் கூடாது.  மேலே சொன்னவற்றை எண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

தாளிக்க: கடுகு, மி.வத்தல் 2, பச்சை மிளகாய் 2, கருகப்பிலை, பெருங்காயம். எண்ணெய். மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை.

கடாய் அல்லது உருளியில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மி.வத்தல், பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி சேர்க்கவும்.  பின்னர் நறுக்கிய காய்களை நன்கு அலம்பிக் கொண்டு எண்ணெயில் போட்டு வதக்கவும்.  காய்கள் நன்கு வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றவும்.  உப்புச் சேர்க்கவும்.  மஞ்சள் பொடி நிறம் கொடுக்கவில்லை எனில் இன்னொரு அரை டீஸ்பூன் சேர்க்கலாம்.  காய்கள் வேகும்வரை கொதிக்கவிட்டு வெந்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும்.  பருப்புச் சேர்த்துக் கொதித்ததும், வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி தூவவும்.  இது விரத நாட்களுக்கு ஏற்ற கொத்சு.  பொங்கல், அரிசி உப்புமா, கிச்சடி வகையறாக்களோடும் , இட்லியோடும் ஒத்துப் போகும்.  அடுத்து நாம் வெங்காயம் போட்ட கொத்சைப் பார்க்கலாம்.

வெங்காய கொத்சு:

சின்ன வெங்காயமாய் இருந்தால் நல்லது.  கால் கிலோ சின்ன வெங்காயத்தைத் தோலுரித்துக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  அல்லது பெரிய வெங்காயம் கால் கிலோவைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்றவை மேலே சொன்னாப் போல் செய்ய வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றித் தாளிதப் பொருட்களைப் போட்டுக் கொண்டு, வெங்காயத்தைப்போட்டு நன்கு வதக்கிக் கொண்டு புளி ஜலத்தை விட வேண்டும்.  உப்புச் சேர்த்துக் கொதித்ததும், பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். பின்னர் வறுத்துப் பொடி செய்த பொடியைப் போட்டுக் கீழே இறக்கவும்.  பச்சைக் கொத்துமல்லி தூவவும்.  இதையே பருப்புச் சேர்க்காமலும் செய்யலாம்.  இட்லிக்கு, காஞ்சிபுரம் இட்லிக்கு மிகவும் நல்ல துணையாக இருக்கும்.

மேலே சொன்ன காய்களோடும் வெங்காயத்தையும் சேர்த்துக் கொண்டு கொத்சு செய்யலாம். இதைத் தவிர தனிக் கத்தரிக்காய் சுட்ட கொத்சு இருக்கிறது,  வதக்கிச் செய்யும் கொத்சு ஏற்கெனவே கொடுத்திருக்கேன்.  கத்தரிக்காய் சுட்ட கொத்சுக்குக் கத்தரிக்காயை நன்கு சுட்டு எடுத்துத் தோலை உரித்துக் கொண்டு கைகளால் நன்கு மசித்துக்கொள்ளவும்.

எலுமிச்சை அளவுப் புளியை நீரில் கரைத்துக் கொண்டு, மசித்த கத்தரிக்காயை அதில் போட்டுக் கலக்கவும்.  பின்னர் அடுப்பில் வாணலியை வைத்துக் கொண்டு கடுகு, கருகப்பிலை, பச்சை மிளகாய், மி.வத்தல் தாளித்துக் கொண்டு கரைத்த புளிக்கரைசலை கத்தரிக்காயோடு சேர்த்துக் கொட்டவும்,  உப்புச் சேர்க்கவும்.  ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கவும். வறுத்த பொடியைப் போட்டுக் கலந்து அரிசி உப்புமாவோடு சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.