எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 26, 2013

காராவடை வேணுமா?

காராவடை வேணுமா?  யாரும் எப்படினு கேட்கலை.  நானும் வீட்டிலே பண்ணலை.  இங்கே(புகுந்த வீடு) காராவடை அவ்வளவாப் பிடிக்கிறதில்லை.  அதனால் பிறந்த வீடு போறச்சே அங்கே பண்ணினால் சாப்பிடறதோடு சரி! :)))) ஆனாலும் எப்படிப் பண்ணுவாங்கனு பார்க்கலாம்.  பார்க்க உ.கி. போண்டா மாதிரித் தான் இருக்கும்.  ஆனால் போண்டா இல்லை.

தேவையான பொருட்கள்:  ஒரு சின்ன கிண்ணம் அரிசி, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு களைந்து ஊற வைக்கவும்.  அரிசி எவ்வளவோ அவ்வளவு உளுத்தம்பருப்பைத் தனியாகக் களைந்து ஊற வைக்கவும்.  கடலை மாவு ஒரு கிண்ணம்.  ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்புக் களைந்து தனியாக ஊற வைக்கவும். தேங்காய் விருப்பமிருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடிப் பொடியாகக் கீறி வைத்துக் கொள்ளவும்.  மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப ஐந்து அல்லது ஆறு, உப்பு, பெருங்காயம்.  பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு. கருகப்பிலை.  பொரிக்க சமையல் எண்ணெய்.

நன்கு ஊறிய அரிசியையும் துவரம்பருப்பையும் மிளகாய் வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நல்ல நைசாக அரைக்கவும்.  தனியே வைக்கவும்.  உளுந்தை நன்கு கொட கொடவென அரைக்கவும்.  அரைத்த உளுந்து மாவில் கடலை மாவு, அரைத்து வைத்த அரிசி து.பருப்பு மாவைச் சேர்த்து, பச்சை மிளகாய்ப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கருகப்பிலை, தேங்காய்க் கீறல்கள், ஊறிய கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கவும்.  தண்ணீர் சேர்க்கவே கூடாது.  மாவில் இருக்கும் நீரே போதும்.  எல்லாம் சேர்ந்து மாவு கையால் உருட்டிப் போடும் பதத்துக்கு வரும் வரை கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.  காய்ந்ததும் மாவை போண்டா போடுவது போல் கைகளால் எடுத்து உருட்டி காய்ந்த எண்ணெயில் போடவும்.  மெல்லிய இரும்புக் குச்சி அல்லது மெல்லிய கத்தி இருந்தால் வேகும் வடையைத் திருப்பிப் போடும்போது அதால் குத்தி விடவும்.  இரண்டு மூன்று இடங்களில் இப்படிக் குத்திவிட்டால் எண்ணெய் உள்ளேயும் போய் நன்கு வெந்து கொள்ளும். நன்கு வெந்ததும் மேலே மிதந்து வரும் காராவடைகளை எண்ணெயை வடித்துத் தட்டில் போடவும்.  இது மேலே மொறு மொறுவெனவும் உள்ளே மடிப்பு மடிப்பாக ஓட்டை போட்டுக் கொண்டு மிருதுவாகவும் இருக்கும்.  தொட்டுக் கொள்ளக் காரமான பச்சைக்கொத்துமல்லிச் சட்னி, புதினாச் சட்னி போன்றவை நன்றாக இருக்கும்.

இதையே கொஞ்சம் சுலபமான வழியில் செய்ய.  அரிசியை ஊறவைத்து வடிகட்டிக் காயவைத்து மெஷினில் அரைத்த அரிசி மாவு ஒரு கிண்ணம்.  இதற்கு ஒரு கிண்ணம் உளுந்து ஊற வைத்துக் கொட கொடவென அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  கடலை மாவு ஒரு கிண்ணம், மற்றச் சாமான்கள் தேங்காய்க் கீறல், கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, இவற்றோடு மிளகாய் வற்றல் போட்டு அரைக்காமல் மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.  கொட கொடவென அரைத்த உளுந்த மாவில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து கொண்டு கருகப்பிலை, கடலைப்பருப்பு, தேங்காய்க்கீறல், பச்சை மிளகாய் போன்றவற்றைக் கலக்கவும்.  இது ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் போல் நீர் சேர்க்கலாம்.  மற்றவை முன் சொன்னாற்போல் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு போண்டா போல் உருட்டிப் போடவேண்டும்.  இது ருசி மாறும்.

Monday, May 20, 2013

ஆலு புஜியா!

ஹிஹிஹி,பேரைக் கேள்விப் பட்டிருக்கீங்க தானே?? வட இந்திய உணவுப் பண்டமாக இருந்தாலும், நமக்கு ரொம்பத் தெரிஞ்சதுங்க இது.  தீபாவளிக்குக் கட்டாயமாப் பண்ணுவோமே.  என்னனு கண்டுபிடிக்க முடியுதா?  படம் எடுத்தேன்.  ஆனால் காமிராவை எடுக்கலை.  சோம்பல்.  செல்லிலே எடுத்திருக்கேன்.  அது எப்படி வந்திருக்குனு தெரியலை. நல்லா வந்தாப்போடுவேன். இல்லைனா இன்னொரு தரம் பண்ணும்போது காமிராவில் எடுத்துட்டுப் போடுவேன்.  க்ர்ர்ர்ர்ர் போட்டால் மட்டும் பார்க்கவா பார்க்கிறீங்க?? உ.கி. பொடிமாஸெல்லாம் போட்டுட்டு யாரும் பார்க்காமலேயே கிடக்கு!

அது போகட்டும்.  ஆலு புஜியாவுக்குத் தேவையான பொருட்கள் முதல்லே அரை கிலோ உ.கி. நல்லாக் குழைய வேக வைச்சுத் தோலை உரிச்சு, (ஹிஹி உ.கி.யோட தோலைத்தான்) உதிர்த்து வைச்சுக்குங்க.

அரைக் கிலோ கடலை மாவு, ஒரு சின்னக் கிண்ணம் அல்லது நூறு கிராம் அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள், ஓமம் பொடிசெய்து ஓமத்தூள் அல்லது கரம் மசாலா.  இரண்டில் ஒண்ணு இருந்தால் போதும்.  நம்ம ஊர் ருசி வேணும்னா ஓமத்தைத் தூள் செய்து போடுங்க.  வட இந்திய ருசி வேண்டும்னா கரம் மசாலாப்பொடி போடுங்க.  கரம் மசாலாப் பொடி போட்டால் மிளகாய்த் தூளைக் குறைச்சுப் போட்டுக்கணும்.  அல்லது வெறும் கரம் மசாலா மட்டும் போட்டால் கூடப்  போதும். பொரித்து எடுக்க சமையல் எண்ணெய். இப்போ எப்படிச் செய்யறதுனு பார்க்கலாமா?

கடலை மாவு, அரிசி மாவு உப்பு, பெருங்காயத் தூள், மி.தூள், கரம் மசாலா அல்லது ஓமத்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலக்கவும்.  முதல்லே மாவில் இது எல்லாம் நல்லா ஒரே மாதிரியாக் கலக்குதானு பார்த்துக்குங்க.  அப்புறமா ஒரு சின்னக் கிண்ணம் அதாவது 50 கிராம் சமையல் எண்ணெயைக் காய வைத்து அல்லது நெய்யைக் காய வைத்து மாவில் ஊற்றவும்.  மறுபடி மாவும், நெய்/எண்ணெய் நன்றாய்க் கலக்கவேண்டும்.  இப்போ உதிர்த்த உருளைக்கிழங்கை மாவில் போட்டுக் கைகளால் நன்கு கலக்கவும்.  கவனம் இப்போ ஜாஸ்தியா இருக்கணும்.

மாவில் ஒரு சொட்டு நீர் கூட விடக் கூடாது.  உருளைக்கிழங்கில் இருக்கும் நீர்ச்சத்தே போதுமானது.  ஏற்கெனவே நெய்/எண்ணெய் வேறே காய வைச்சு ஊத்தி இருக்கோம்.  நல்லாக் கலந்து மாவு சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும் வரை பிசையவும்.  எண்ணெயைக் கடாயில் ஊற்றிக் காய வைக்கவும்.  அடுப்பைத் தணிக்கவும்.  பிசைந்த மாவை காராச்சேவுத் தட்டுப் போல இருக்கும் மெலிதான ஓமப்பொடித் தட்டில் கடாயின் மேல் தட்டை வைத்துக் கொண்டு தேய்க்க வேண்டும்.  தேய்த்தால் மெலிதான ஓமப்பொடியாக விழும். இந்தத் தட்டு (ஹிஹி, உள்ளே போட்டுட்டேன், வெளியே எடுத்துப் படம் எடுத்துப் போடறேன்.) இல்லையெனில் ஓமப்பொடி அச்சில் பிழியலாம்.  எண்ணெயில் போட்ட உடனே வெந்து மேலே வந்துவிடும்.  ஆகவே முதல்லே எண்ணெய் நன்கு காய்ந்தால் போதுமானது.  அடுப்பு ஒரே சீராக இருந்தால் தான் எண்ணெய் அதிகம் காயாமல் இருந்தால் தான் நிறம் மாறாமல் வரும். தட்டுத் தேவை எனில் துத்தநாகத் தகட்டை சதுரம், செவ்வகமாக வெட்டி அதில் மெலிதாக ஓட்டைகள் போட்டு நான்கு பக்கமும் மெலிதான கட்டைகளை அடித்து வைத்துக் கொள்ளலாம்.

அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது னு சொன்னா ஓமப்பொடி அச்சிலேயே பிழிஞ்சுக்கலாம்.   சாப்பிடறச்சே எப்படியும் உடைச்சுத் தானே சாப்பிட்டாகணும்.  :))))) மாலை நேரத் தேநீரோடு அல்லது தயிர் வடையின் மேலே தூவ, அல்லது பேல் பூரியின் மேலே தூவ, பானி பூரியோடு சேர்த்து உண்ண இவை எதுவுமே இல்லாட்டியும் அப்படியே சாப்பிடலாம்.  :)))))

Saturday, May 4, 2013

ஜி+இல் இருந்து ஒரு பகிர்வு.

உ.கி. கு.மி. காரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் எடுத்து நறுக்கிக்கோங்க.  பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியதில் கொஞ்சம் எடுத்துத் தக்காளியோடு அரைச்சு வைச்சுக்குங்க. 

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு வெங்காயம், தக்காளி விழுதைப்போட்டு வதக்கிக் கொண்டு, பச்சைமிளகாய் இஞ்சி விழுதையும் போட்டு வதக்கவும்,. நறுக்கிய காய்களைப் போட்டு வதக்கவும்.  மஞ்சள் பொடி, மி,பொடி, தனியாப் பொடி சேர்க்கவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும், தேவையான நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.  காய்கள் நன்கு வெந்து வரும் நேரம் வறுத்த ஜீரகப் பொடியும் கரம் மசாலாப்பொடியும் சேர்த்து அதிகம் கொதிக்க விடாமல் கீழே இறக்கவும். பச்சைக் கொத்துமல்லி தூவவும்.  இதை மிக்சட் வெஜிடபுள் கறி என்றும் சொல்வார்கள்.  கிரேவி வேண்டாம் எனில் நீர் சேர்க்காமல் காய்களை வதக்கிக் கடைசியில் மேலே சொன்ன பொடிகளைச் சேர்த்துக் கீழே இறக்கலாம்.  பரிமாறும்போது முடிந்தால் கொஞ்சம் சீஸ் சேர்க்கலாம்.  வீட்டிலேயே பாலில் மேலே இருக்கும் ஏடுகளைச் சேர்த்து (மோர் சேர்க்காமல்) வைத்து ஒரு ஸ்பூனால் கலந்து கொண்டால் போதும். :)))))

மசாலா வாசனை தூக்கலாகத் தெரிய வேண்டுமெனில் அடுப்பில் எண்ணெய் வைத்ததும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கரைய விடவும். 

ரஞ்சனி நாராயணனின் ஜி+இல் ஒருத்தர் கேட்டதுக்கு மேற்கண்ட சமையல் குறிப்பைக் கொடுத்தேன். அவசரமாக எழுதியது. என்றாலும் பரோட்டா, சப்பாத்திக்குத் துணை போகும் உணவு இது.