எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, March 31, 2014

குழம்பில் போடும் வெங்காயக் கறிவடாம்

ஏற்கெனவே வெங்காயக் கறிவடாம் குறித்து எழுதி இருக்கேன்.  ஆகையால் என்னடா இதுனு எல்லோரும் பார்ப்பீங்கனு தான் விளக்கம் கொடுத்துட்டேன்.  அது பொரிச்சுத் தொட்டுக்கொள்ள வைச்சுக்கறதுக்கு.  இது குழம்பு வைக்க. கூட்டு, கலந்த சாதம் போன்றவற்றில் போட்டுக் கலக்க. 

சிவப்புக் காராமணி ஒரு ஆழாக்கு அல்லது 200 கிராம்

இதை முதலிலேயே ஊற வைக்கணும்.  எட்டு மணி நேரமாவது ஊறணும், ஆகவே முதல்நாள் மாலை அல்லது இரவே ஊற வைக்கவும். 

மறுநாள் காலை அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு, அரை ஆழாக்குக் கடலைப்பருப்புக் களைந்து ஊற வைக்கவும்.  காலை ஏழு மணிக்குள்  அரைச்சுப் போட்டுடறது நல்லது என்பதால் முடிந்தவரை காலை ஐந்து மணிக்குள்ளாக ஊற வைக்கவும்.  இல்லையென்றாலும் பரவாயில்லை.  ஒன்பது மணிக்குள்ளாகப் போட்டுடலாம்.

மேற்சொன்ன அளவுக்குத் தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் பத்து அல்லது பனிரண்டு(காரம் வேண்டும் எனில் கூடப் போட்டுக்கலாம்)

தேவையான உப்பு

பெருங்காயம்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்

கால் கிலோவில் இருந்து அரைகிலோவுக்குள்ளாகப் பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் தோல் உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த சாமான்களை மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.  நன்கு நைசாகவே அரைக்கலாம்.  பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துவிட்டு நன்கு கலக்கவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் அடியில் எண்ணெய் தடவி அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டை நன்கு அலம்பித் துடைத்து அதில் இந்த மாவை உருண்டையாகவோ அல்லது வடை போலவோ வைக்கவும்.  குறைந்தது மூன்று நாட்கள் (நல்ல வெயில் அடித்தால்) காய வேண்டும்.  காய்ந்த பின்னர் கையால் நொறுக்கிப் பார்த்தால் தூளாகும்.  அந்தப் பதம் வந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

வெறும் குழம்பு வைத்தால் போடத் தான் ஏதும் இல்லை எனில் குழம்பை இறக்கும்போது இதை எண்ணெயில் பொரித்துச் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.  கூட்டுகளுக்குப் போடலாம். கீரையில் வெங்காய வாசனை பிடிக்கும் எனில் போடலாம்.  மசாலா சாதங்களிலும் சேர்க்கலாம்.  நாளை போடும்போது நினைவிருந்தால் படம் எடுத்துப் போடறேன். :))))

Wednesday, March 12, 2014

காரடையான் நோன்பு நூற்க வாங்க!

காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் ஆரம்பிக்கும் வேளையில் கொண்டாடப் படும் ஒன்று.  பல சமயங்களிலும் இந்த மாதம் பிறப்பது என்பது நடு இரவில், அகாலத்தில் என வரும்.  இந்த வருடமும் இரவு பனிரண்டு மணிக்கு என்பதால் இரவு ஒன்பது மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாக நோன்பை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.  இப்போ நோன்புக் கொழுக்கட்டைக்கு வேண்டிய பொருட்கள்!

வெல்லக் கொழுக்கட்டைக்கு:

நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம்

அரிசியை நன்கு சுத்தம் செய்து களைந்து கல்லரித்து இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  பின்னர் நீரை வடித்து அரை மணி வைக்கவும். அதன் பின்னர் மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கவும்.  சலிக்கணும்னு கட்டாயம் இல்லை.  கொஞ்சம் கொரகொரப்பு இருக்கலாம்.  பிடிக்காதவங்க சலிச்சு எடுத்துக் கொண்டு நைசாக இருக்கும் மாவை வெல்லக் கொழுக்கட்டைக்கும், கொர, கொரப்பாக இருப்பதை உப்புக்கும் வைச்சுக்கலாம். பொதுவாக இந்த நோன்புக்கு மிஷினில் கொடுத்து திரிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் இப்போது சிலர் தயாராகக் கிடைக்கும் அரிசி மாவையோ அல்லது மெஷினில் கொடுத்து அரைத்தோ பயன்படுத்துகின்றனர்.  இது அவரவர் விருப்பம்.

மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வெறும் வாணலியில் போட்டுக் கோல மாவு பதம் வரும் வரை வறுக்கவும்.  ஒரு தாம்பாளத்தில் போட்டு ஆற வைக்கவும்.

வெல்லம் தூள் செய்தது ஒரு கிண்ணம்

தேங்காய் மூடி ஒன்று, பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.

ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்.

காராமணி அல்லது முழுத் துவரை  இரண்டு டேபிள் ஸ்பூன்.  முதல் நாளே ஊற வைத்துக் களைந்து கல் அரித்துக் கொஞ்சம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

நீர் தேவையான அளவு.


ஒரு வாணலி அல்லது வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கொதிக்க விடவும்.  ஏற்கெனவே வேக வைத்துத் தனியாக வைத்திருக்கும் காராமணி/துவரையைச் சேர்க்கவும். வெல்லத் தூளையும் சேர்க்கவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  பின்னர் வறுத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக் கொண்டே வரவும்.  தேங்காய்க் கீற்றுக்களையும் சேர்க்கவும்.  நன்கு கிளறி மாவு கெட்டிப் பட்டு சுருண்டு வருகையில் கீழே இறக்கி ஏலப் பொடியைச் சேர்த்து ஆற விடவும்.  இது கொஞ்சம் ஆறட்டும்.  அதுக்குள்ளே நாம,

இப்போது அடுத்து உப்புக் கொழுக்கட்டைக்கான முறையைப் பார்க்கலாம்.

மாவு முன் சொன்ன முறையில் தயாரித்து ஆற விடவும்.  இதற்கும் காராமணி//துவரை தேவை.  ஆகவே முன் சொன்னாற்போல் வெல்லக் கொழுக்கட்டைக்கு வேக விடுகையில் இதற்கும் சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.  தேங்காய்க் கீற்றும் அப்படியே.  வெல்லத்துக்கும், இதற்கும் சேர்த்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தாளிக்க

சமையல் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு,

உ.பருப்பு

க.பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

இஞ்சி ஒரு துண்டு

பச்சை மிளகாய் அவரவர் ருசிக்கு ஏற்ப மூன்றிலிருந்து நான்கு

கருகப்பிலை

பெருங்காயம்

உப்பு

அடி கனமான வேறொரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பருப்பு வகைகளைப் போட்டுத் தாளித்துக் கொண்டு இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், பெருங்காயம் சேர்க்கவும். இரண்டு கிண்ணம் நீரை ஊற்றி உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும்.  நீர் கொதிக்கையில் வெந்த காராமணி/துவரையைச் சேர்க்கவும்.  வறுத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும்.  விரைவில் மாவு கெட்டிப்பட்டு உருண்டு திரண்டு வந்துவிடும்.  கீழே இறக்கி ஆற வைக்கவும்.

இப்போது ஒரு இட்லிக் கொப்பரை அல்லது வாணலியில் ஒற்றைத் தட்டில் வாழை இலையை எண்ணெய் தடவிப் பரப்பவும். , முதலில் வெல்லக் கொழுக்கட்டை மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வடை போல் தட்டி நடுவில் ஒரு சின்ன குழி செய்து இட்லிக் கொப்பரையில் இருக்கும் வாழை இலையில் வைக்கவும். ஒரே சமயம் இம்மாதிரிப் பத்துப் பதினைந்து அடைகள் செய்து வேக வைக்கலாம்.  குறைந்தது வாழை இலை பரப்பிய அந்தத் தட்டுக் கொள்ளும் அளவுக்கு வைக்கவும்.  பின்னர் மூடியால் மூடிவிட்டு ஐந்திலிருந்து பத்து நிமிஷம் வரை வேக வைக்கவும். திறந்து பார்த்தால் மேலே வேர்த்து விட்டிருக்கும்.  வெளியே எடுத்து  ஆற விடவும்.  எல்லா மாவையும் இதே போல் செய்யவும்.

இதே போல் உப்புக் கொழுக்கட்டை மாவையும் வடை போல் தட்டி நடுவில் குழி செய்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

சுவாமி அலமாரி அல்லது பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு எதிரே தனியாக இரண்டு கோலம் போட்டு, (நீங்க தனியா இருந்தால் இரண்டு கோலம், வீட்டில் இரண்டு, மூன்று நபர்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிக்கோலம்) அதில் நுனி வாழை இலையை வைக்கவும்.  நல்ல சுத்தமான வெண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.  சுவாமி படங்களுக்கு எதிரே செய்த கொழுக்கட்டைகளை வைத்து, வேறொரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், உடைத்த தேங்காய், நோன்புச் சரடுகள் வைக்கவும்.  நோன்புச் சரடுகளை முதலிலேயே பூவோ அல்லது மஞ்சளோ வைத்துக் கட்டித் தயார் செய்யவும்.

நுனி வாழை இலையில் முதலில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் வைத்துவிட்டு இரண்டு அல்லது நான்கு வெல்லக் கொழுக்கட்டை, நான்கு உப்புக் கொழுக்கட்டையை இரு இலைகளிலும் அல்லது எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேர் இலைகளிலும் வைக்கவும்.அவரவர் ஒவ்வொரு இலைக்கு முன்னாலும் நின்று கொள்ளவும்.  நோன்புச் சரடுகளையும் சேர்த்து அம்பிகையை வேண்டிக் கொண்டு நிவேதனம் செய்து வழிபட்டுக் கற்பூரம் காட்டவும். எல்லாருமே தனித்தனியாக நிவேதனம் செய்யலாம்.  எல்லாரும் நிவேதனம் செய்து முடிந்ததும் கற்பூர ஆரத்தி பொதுவாகச் செய்யலாம்.

பின்னர் ஒரு நோன்புச் சரடை முதலில் எடுத்து அம்மன் படத்தின் மேல் சார்த்தவும். அவரவர் குலதெய்வம் அம்மனாக இருந்தால் அந்தப் படத்தின் மேலேயும் சார்த்தலாம்.  பின்னர் வயதில் மூத்த சுமங்கலிப் பெண் முதலில் கழுத்தில் தான் கட்டிக் கொண்டு பின்னர் வயதில் சிறியவர்களுக்கு அவரே கட்டிவிடவேண்டும். ஒரு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கும் கட்டுவது உண்டு.  பின்னர் நிவேதனம் செய்த இலைகளில் இருந்து திருமணம் ஆன பெண்கள் வேறொரு தட்டு அல்லது இலையில் தங்கள் கணவன்மாருக்கு இந்த நிவேதனப் பிரசாதத்தைக் கட்டாயமாய் எடுத்து வைக்கவும்.  வகைக்கு ஒன்று என எடுத்து வைத்தால் கூடப் போதும்.  பின்னர் அவர்கள் சாப்பிட்டு முடிந்த பின்னர் கணவனுக்கு நிவேதனப் பிரசாதத்தைக் கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் கணவருக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் செய்த கொழுக்கட்டைகளைப் பகிர்ந்தளிக்கலாம்.

சுமங்கலிப் பெண்களுக்கு அன்று முழுதும் விரதம் என்பதால் நோன்பு நூற்கும் வரை பொதுவாக எதுவும் சாப்பிட மாட்டார்கள்.  நோயாளிகள், வயதானவர்கள், பசி தாங்க முடியாதவர்கள் கஞ்சியோ அல்லது சப்பாத்தி மாதிரியான ஆகாரமோ செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக்கலாம்.  செய்த கொழுக்கட்டையில் குறைந்தது இரண்டாவது எடுத்து வைத்து நோன்பு முடிந்த மறு நாள் காலையில் பசுமாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.


எங்கே, இங்கே ஶ்ரீரங்கத்தில் பசுமாட்டுக்கு அப்படி எல்லாம் கொடுத்துட்டு அப்புறமா வீட்டுக்கு வரமுடியாது! :)))))  மாட்டுக்காரங்க சும்மா விடமாட்டாங்க!


எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்தே. இந்தப் பக்கத்தில் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியாகும் வகையில் அமைத்திருந்தேன்.  அதனால் எனக்கு மின் மடல் வராமல் பின்னூட்டங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.  ஆனால் இப்போது அதை மாற்றி விட்டேன்.  மட்டுறுத்தலுக்கு உட்பட்டுப் பின்னூட்டங்கள் வெளியாகும் வகையில் மின் மடலுக்கு வரும்படி மாற்றிவிட்டேன். ஆகையால் படிக்கும் நண்பர்கள் பின்னூட்டங்கள் உடனே வெளியாகவில்லையே என எண்ண வேண்டாம்.  இப்போ ஒரு பாரம்பரிய செய்முறைக் குறிப்பைப் பார்ப்போமா?

நாளை காரடையான் நோன்பு.  எல்லாப் பெண்களுக்கும் நாளை கட்டாயமாய் நோன்பு  இருக்கும்.  இதை சாவித்திரி நோன்பு என்றும் சொல்வதுண்டு.  இதற்கு நிவேதனமாக அரிசி மாவில் செய்த வெல்லக் கொழுக்கட்டை, (ஒரு சிலர் அடை என்பார்கள்) உப்புக் கொழுக்கட்டை பண்ணுவாங்க.  சாவித்திரி காட்டில் கிடைத்த வரகரிசியில் மாவாக்கி, அங்கே கிடைத்தக் காராமணிகளைப் போட்டு, சுள்ளிகளைப் போட்டு எரிய வைத்து  வைக்கோலிலேயே அடைகளையும்  வேக வைத்து எடுத்தாள் என்பது செவிவழிக் கூற்று.  பல காலம் என்னோட அம்மா காரடையான் நோன்புக்காகவே மாட்டுக்காரர்களிடம் கேட்டு வைக்கோல் வாங்கி வந்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டு, இட்லிக் கொப்பரையில் துணி போடும் இடத்தில் அதற்கு பதிலாக வைக்கோலைப் போட்டு அதில் இந்தக் கொழுக்கட்டை/அடைகளைத் தட்டிப் போட்டு வேக வைப்பார்.

இப்போ அதெல்லாம் யாருக்கும் தெரியாத ஒன்று. :))) அடை செய்முறையை மட்டும் பார்ப்போம்.  இதை நோன்பன்று மட்டும் தான் செய்து சாப்பிடணும்னு இல்லை.  சாதாரணமான நாளிலும் மாலை டிஃபனுக்குச் செய்யலாம். வாங்க , மத்தியானமா அடுத்த பதிவுக்குப் போய் அடை செய்வது எப்படினு பார்க்கலாம்!