எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, February 28, 2016

உணவே மருந்து-- சீரக சாதம், ஜீரக உருளைக்கிழங்குடன்!

பல நக்ஷத்திர உணவு விடுதிகளிலும் இந்த ஜீரா ரைஸ் எனப்படும் ஜீரக சாதம் கொடுப்பார்கள். இதை நம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

பாஸ்மதி அரிசி ஒரு கிண்ணம் கழுவிக் களைந்து நீரில் ஊற வைக்கவும்.

நெய் அல்லது வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

ஜீரகம் இரண்டு டீஸ்பூன்

ஒரு சின்னத் துண்டு லவங்கப்பட்டை,

ஒரு கறுப்பு ஏலக்காய், ஒரு பச்சை ஏலக்காய், ஒரு கிராம்பு

மசாலா இலை (தேஜ்பத்தா) ஒரு துண்டு

பச்சை மிளகாய் பெரிதாக இருந்தால் ஒன்று, சின்னதாக இருந்தால் 2 நடுவில் கீறிக்கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு

வெங்காயம் நடுத்தர அளவில் ஒன்று நீளமாக நறுக்கி எண்ணெயில் நன்கு வதக்கித் தனியாக வைக்கவும்.

கொத்துமல்லி, புதினா பொடிப்பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடி

ஒரு கிண்ணம் பாஸ்மதி அரிசிக்குத் தேவையான நீர். சில வகை பாஸ்மதி அரிசிக்கு 2 கிண்ணம் நீர் தேவைப்படும். சிலவகைக்கு ஒன்றரைக் கிண்ணமே போதும். அவரவர் வழக்கப்படி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் அல்லது வெண்ணெய் போட்டு முதலில் ஜீரகத்தைத் தாளிக்கவும். ஜீரகம் நன்கு சிவந்து பொரிந்ததும் லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை ஒவ்வொன்றாக வரிசைப்படி தாளிக்கவும். பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்போது ஊற வைத்த பாஸ்மதி அரிசியை வடிகட்டித் தாளிதத்தில் போட்டு வெண்ணெய் அல்லது நெய் முழுவதும் கலக்கும்படி நன்கு சேர்க்கவும்.அரிசியை வறுத்ததும் உப்புச் சேர்த்துத் தேவையான நீர் சேர்த்துக் கடாயிலேயே வேகவிடவும். அல்லது குக்கரில் ஒரு விசில் கொடுத்து உடனே எடுத்துவிடவும். வறுத்த வெங்காயத்தை ஜீரகச் சாதத்தில் கவனமாகக் கலந்து மேலே கொத்துமல்லி, புதினா தூவி அலங்கரிக்கவும். தால், கொண்டைக்கடலை கிரேவி, பட்டாணி கிரேவி, ராஜ்மா கிரேவி போன்றவற்றோடு உண்ண ருசியாக இருக்கும்..

அடுத்து ஜீரக உருளைக்கிழங்கு!

உருளைக்கிழங்கு கால் கிலோ வேக வைத்துத் தோலுரித்துக் கொண்டு நான்கு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

தாளிக்க எண்ணெய், தேவையான உப்பு

மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன்,

ஜீரகம் இரண்டு டீஸ்பூன்

கரம் மசாலாப் பொடி ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

கரம் மசாலாப் பொடி போடாமல் மசாலா சாமான்களை அப்படியே தாளித்தும் செய்யலாம்.

எலுமிச்சைச் சாறு தேவையானல் இரண்டு டீஸ்பூன்

கொத்துமல்லி, புதினாப் பொடியாக நறுக்கியது!

கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு முதலில் ஜீரகத்தைத் தாளிக்கவும். பின்னர் தேவையானால் பச்சை மிளகாய் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டங்களைப் போடவும். மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தேவையானல் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொத்துமல்லி, புதினா தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தி, ஃபுல்கா ரொட்டி, பரோட்டா, தால் சாதம் போன்றவற்றோடு இவை சரியான துணையாக இருக்கும்.


Thursday, February 25, 2016

உணவே மருந்து --சீரகம்!

இப்போ நம்ம வெங்கடேஷ் பட் சொன்ன உடுப்பி ரசம் பத்திப் பார்ப்போம். இதிலும் சீரகம் தான் சேர்க்கிறார். ஆனால் அளவு எல்லாம் இருக்கு! மேலும் இதற்காகப் பயன்படுத்தும் மிளகாய் வற்றலும் மங்களூர் வற்றல் என்றார். அதாவது காய்ந்த மிளகாய் கொஞ்சம் சுருங்கிக் காணப்படுமே அது தேவை! அல்லது காஷ்மீர் மிளகாய் எனப் பெரிய பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும். அதைப் பயன்படுத்திக்கலாம்.  இதுவும் கிட்டத்தட்ட ஜீரக ரசமே! ஆகையால் தான் இங்கே போடுகிறேன். முந்தாநாள் செய்து பார்த்தேன். நல்ல தெளிவாக ரசம் இருந்தது.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே இங்கே எழுதுகிறேன்.

காஷ்மீர் மிளகாய் வற்றல் 4

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

ஜீரகம்    ஒன்றரை டீஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி இவற்றை

வறுக்க தே.எண்ணெய் தேவையான அளவு. மேலே சொன்னவற்றை ஒவ்வொன்றாக நிதானமாக வறுத்துக் கொண்டு ஒரு பேப்பரில் போட்டு எண்ணெய் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும்.

தாளிக்க

நெய் அல்லது தே.எண்ணெய்

கடுகு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை

ரசம் செய்யத் தேவையான பொருட்கள்

தக்காளி நடுத்தரமாக ஒன்று

புளிக்கரைசல் அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

துவரம்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

பெருங்காயம் கால் டீஸ்பூன் அல்லது ஒரு துண்டு பெருங்காயக் கட்டி

பச்சை மிளகாய் தேவையானால் நடுவில் கீறிக்கொள்ளவும். இந்த அளவு ரசத்துக்கு ஒன்று போதும்.

கொத்துமல்லித் தழை

வெல்லம் தூளாக இரண்டு டீஸ்பூன் (நான் வெல்லம் சேர்க்கவில்லை. ரங்க்ஸுக்கு சர்க்கரை என்பதோடு வெல்லம் சேர்த்தால் அந்த ருசியும் பிடிக்கிறதில்லை)

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பெருங்காயம் சேர்க்கவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தே.எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துத் தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்பு பருப்புக் கரைசலைக் கொஞ்சம் ஊற்றி மீண்டும் கொதிக்கவிடவும். மீதம் இருக்கும் பருப்புக் கரைசலில் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கரைத்து ரசத்தில் ஊற்றவும். பொடி போட்டதும் ரசம் அதிகம் கொதிக்கக் கூடாது. கீழே இறக்கியதும் கொத்துமல்லித் தழை தூவவும்.

சாதாரணமாக ரசத்துக்குக் கடைசியில் தான் தாளிதம் சேர்ப்போம். இங்கே ரசம் கொதிக்கையிலேயே தாளிதம் செய்து சேர்க்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் முதலில் தாளிதம் செய்து கொண்டு தான் வெங்கடேஷ் பட் அதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைத்தார்.  இதுவும் ஒரு வகை ஜீரக ரசமே!


Monday, February 22, 2016

உணவே மருந்து--சீரகம்

Image result for ஜீரகம்

நன்றி விகடன்.காம், கூகிளார் வாயிலாக!

நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தும் பொருள் சீரகம். இதைத் தமிழில் சீரகம் என்று சொன்னாலும் வடமொழி, ஹிந்தியில் ஜீரா என்று சொல்கின்றனர். ஒரு சிலர் ஜீரகம் என்றும் கூறுவார்கள். சீர்+அகம்  என்று பிரிக்கப்படும் இது நம் உள்ளுறுப்பை அதாவது அகத்தைச் சுத்தம் செய்வதாலேயே இந்தப் பெயர் என்றும் சொல்கின்றனர்.  ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மேஜைக்கரண்டி ஜீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் அந்த நீரை அருந்தினால் செரிமானம் சரியாகும். வாயுத் தொல்லை ஏற்படாது.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், வங்காளம் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இது பயிராக்கப்படுகிறது.  சின்னஞ்சிறு செடியாக இருக்கும் இது ஒரு வருடத்தில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். இலைகள் துண்டு துண்டாகக் காட்சி அளிக்கும். செடியிலேயே ஒருவித வாசனை நிறைந்திருக்கும். பூக்கள் வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஜீரகத்தை உள்ளே கொண்ட கனிகள் தடித்த உரோமங்களால் பாதுகாக்கப்பட்டுப் பக்கவாட்டில் அமுங்கிக் காணப்படும்.

வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு டீஸ்பூன் ஜீரகத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டு அரைக்கிண்ணமாக வற்றக் கொதிக்கவிட்டு அதிலே ஒரு ஸ்பூன் வெண்ணையைப் போட்டுக் கொடுத்தால் சற்று நேரத்தில் வலி அமுங்கும். வாயுவும் பிரியும். பொதுவாகத் தாளிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் மசாலாப் பொடி செய்யவும் ஜீரகம் அவசியம் தேவை. ஜீரகத்தை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு அதைச் சமையலிலும் சேர்க்கலாம். ஒரு ஸ்பூன் பொடியை வாயில் போட்டுக் கொண்டு இளம் சூடான வெந்நீரைக் குடித்தால் ஜீரணமும் ஆகும்.

ஜீரகம் ரசம் மிகவும் பெயர் போன ஒன்று. இதை மூன்று நான்கு விதங்களில் தயாரிக்கலாம்.

முதல்முறை

ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுப் புளி. சிறிய தக்காளி ஒன்று,
ரசப்பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு! பெருங்காயம்(தேவையானால்). ஜீரகம் போட்டால் சிலர் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள்.

அரைக்க:- ஒரு சின்ன மிளகாய் வற்றல், இரண்டு டீஸ்பூன் ஜீரகம், இரண்டு டீஸ்பூன் துவரம்பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன். மி.வத்தல், ஜீரகம், துபருப்பு ஆகியவற்றை நன்கு ஊற வைத்துக் கருகப்பிலையுடன் சேர்த்து மிக்சியில் அல்லது அம்மியில் நன்கு அரைக்கவும்.

தாளிக்க: நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, கருகப்பிலை, சின்ன மி.வத்தல்

மேலே சொன்ன அளவுப்படி புளிக்கரைசலைத் தக்காளி, உப்பு, ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அரைத்த கலவையை மேலும் கொஞ்சம் நீர் விட்டுக் கலக்கி ரசத்தில் விட்டு தேவையான அளவுக்கு நீர் விட்டு விளாவவும். மேலே பொங்கி வருகையில் நுரையை எடுத்துவிடவும். நுரை இருந்தால் ரசம் கெட்டியாகக் குழம்பு போல் இருக்கும். அப்படி இருந்தால் பிடிக்குமெனில் அப்படியே வைச்சுக்கலாம். ரசம் தெளிவாக வேண்டுமெனில் நுரையை எடுத்தால் தான் நல்லது. பின்னர் நெய்யில் கடுகு, கருகப்பிலை ஒரு சிறு மி.வத்தல் போட்டுத் தாளிக்கவும்.

இன்னொரு முறை:

அதே அளவுப் புளி, உப்பு, தக்காளி எடுத்துக்கொள்ளவும். பெருங்காயம் தேவை எனில் சேர்க்கவும். ஆனால் ரசப்பொடி போட வேண்டாம்.

மி.வத்தல் ஒன்று, ஒரு டீஸ்பூன்  மிளகு, ஒன்றரை டீஸ்பூன் ஜீரகம், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், கருகப்பிலை எடுத்துக் கொண்டு முதலில் சொன்ன பொருட்களை நீரில் ஊற வைத்துக் கொண்டு கருகப்பிலை சேர்த்து அரைக்கவும். புளிக் கரைசல், உப்பு, தக்காளி சேர்த்துப் புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதில் நீர் விட்டுத் தேவையான அளவுக்கு விளாவவும். இதற்கும் நுரையை எடுக்கலாம். எடுக்காமலும் பயன்படுத்தலாம். பின்னர் மேலே சொன்ன மாதிரி நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை, மி.வத்தல் தாளிக்கவும்.

இன்னொரு முறை புளிக்கரைசலில் உப்புச் சேர்த்து ரசப்பொடி சேர்த்துப் பெருங்காயம் போட்டுக் கொதிக்க விடவும். பின்னர் அரைத் தக்காளியுடன் டீஸ்பூன் ஜீரகம், பத்து மிளகு சேர்த்துக் கொண்டுக் கருகப்பிலையுடன் அரைத்து ரசத்தில் சேர்த்து விளாவவும். நெய்யில் தாளிக்கலாம்.  மிளகு, ஜீரகம் அரைத்த ரசம் ஏற்கெனவே மிளகு பதிவில் வந்து விட்டது.

ஜீரக ருசி தொடரும்.

Tuesday, February 16, 2016

உணவே மருந்து--மிளகு முடிவு!

இவற்றைத் தவிர மிளகு அவல், மிளகு போட்ட காராசேவு, மிளகு மிக்சர் போன்ற காரப் பொருட்களும் உண்டு.  நல்ல கெட்டி அவலை உப்புச் சேர்த்து ஊற வைத்துக் கொண்டு, நல்லெண்ணெயில் கடுகு, உபருப்பு, கருகப்பிலை தாளித்துக் கொண்டு, அவலைப் போட்டுக் கிளறிக் கீழே இறக்கும்போது ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிச் சாப்பிடலாம். எங்க வீட்டில் அமாவாசையன்று மாலை அநேகமாக மிளகு அவல் தான்! காராசேவுக்குக் கடலை மாவு+ அரிசிமாவில் உப்பு, பெருங்காயம், மிளகுப் பொடி சேர்த்துக் கொண்டு நன்கு நீர் விட்டுப் பிசைந்து காராசேவு தட்டில் போட்டுத் தேய்க்க வேண்டும். மிளகு வடை கூட உண்டு.

உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு நன்கு களைந்து கொண்டு நீரை வடித்து அதில் உள்ள ஈரத்தோடு பத்து நிமிடம் வைக்க வேண்டும். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்தால் மாவு புசுபுசுவென வரும். மாவை நன்கு அரைத்ததும் தேவையான உப்பு, மிளகுப் பொடி (பெருங்காயம் தேவையானால்) சேர்க்கவேண்டும்.  பின்னர் மெலிதாக வடையாகத் தட்டி எடுக்கலாம். பருப்புத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் பாதி உடைத்த உளுத்தம்பருப்பைக் களைந்து இந்த மாவோடு சேர்த்துக் கொண்டு வடை தட்டலாம்.  ஒரு சிலர் உடைத்த உளுத்தம்பருப்பையே ஊற வைத்துக் கொரகொரப்பான மாவாக்கிக் கொண்டு அதில் கொஞ்சம் ரவை சேர்த்து, மிளகு பொடி, உப்புச் சேர்த்தும் வடை தட்டுவது உண்டு. மிக்சருக்குத் தேவையான சாமான்களைச் சேர்த்ததும் நெய்யில் கருகப்பிலை வறுத்துக் கொண்டு மிளகுப் பொடி, உப்புச் சேர்த்துக் கொண்டு மிக்சர் கலவையில் கொட்டி நன்கு கிளற வேண்டும்.  கோயிலில் புளியோதரைக்குப் புளிக்கரைசலை மட்டும் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொண்டு அந்தப் புளி விழுதைச் சாதத்தில் போட்டுக் கலந்து கொண்டு நெய்யில் மிளகை வறுத்து நைசாகப் பொடி செய்து போட்டுச் சேர்ப்பார்கள். பின்னர் தாளிதம் சேர்க்கப்படும். நிவேதனங்களில் பொதுவாக மிளகாய் சேர்ப்பதில்லை.

மிளகில் நம் உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உண்டு. மிளகுப் பொடியையும் உப்பையும் கலந்து பற்களைச் சுத்தம் செய்தால் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும். வாய் துர்நாற்றம் போகும்.

ஏதேனும் பூச்சி கடித்ததோ என்ற சந்தேகம் வந்தால் ஐந்து மிளகை வாயில் போட்டு மென்றால் மிளகின் காரம் சுரீர் என நாக்கில் பட்டால் பூச்சிக்கடி இல்லை எனப் புரிந்து கொள்ளலாம். அப்படி உணர்ச்சி தெரியாவிட்டால் பூச்சிக்கடி எனப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் மருத்துவம் செய்து கொள்ளலாம். மிளகு எப்போதும் நம் சமையலறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.

Wednesday, February 3, 2016

உணவே மருந்து-- மிளகு குழம்பும், மிளகு, ஜீரகம் ரசமும்!

அடுத்து மிளகு குழம்பு செய்முறை:--

ஒரு பெரிய எலுமிச்சை அளவுக்குப் புளியை நீரில் ஊறவைத்துக் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இதற்கு வறுத்து அரைக்க

மிளகாய் வற்றல் ஆறு அல்லது எட்டு(நான் மிளகே அதிகம் சேர்ப்பேன்;  அதோடு மிளகுக் காரத்தைத் தணிக்க என சீரகமோ, கொ.மல்லியோ சேர்ப்பதில்லை.  கொஞ்சம் மிளகு காரம் நாக்கில் தெரியணும்) பெருங்காயம், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், இவ்வளவு காரம் வேண்டாம் என்பவர்கள் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு டேபிள் ஸ்பூன் உ.பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன்.  எல்லாப் பொருட்களையும் நல்லெண்ணெயில் நன்கு வறுத்துக்கொள்ளவும்  ஆற வைக்கவும்.  பின்னர் நன்கு நைசாக அரைத்துக்கொண்டு புளிக்கரைசலில் கலந்து கொள்ளவும்.

தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, தேவையான உப்பு குழம்பில் சேர்க்க.

கல்சட்டி அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகு போடவும்.  வெடித்ததும், மஞ்சள் பொடி சேர்த்துவிட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை மெதுவாக ஊற்றவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.  குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும்.  சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் குழம்பைக் கலந்து சாப்பிடலாம்.  நன்கு கொதித்த குழம்பு ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.

அடுத்ததாக ஒரு ரசம். மிளகு குழம்பு மற்றும் இந்த ரசம் ஏற்கெனவே இதே வலைப்பக்கத்தில் வெளி வந்தவையே! :) எனினும் மிளகு பற்றிய பதிவுக்காக மீள் பதிவாய்ப் போட்டிருக்கேன்.

ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம்!

பொதுவாய் இம்மாதிரியான ரசங்களே பத்திய உணவு வகையைச் சேர்ந்தவை என்றாலும் இந்த ரசம் குறிப்பாக பேதி மருந்து உட்கொள்ளும் நாட்களில் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கொடுப்பார்கள்.  முன்னெல்லாம் விளக்கெண்ணெய் கொடுத்து குடலைச் சுத்தம் செய்து வந்த நாட்கள் உண்டு.  காலையிலே விளக்கெண்ணெய் கொடுத்ததும் ஒரு மணி நேரம் கழிச்சுக் காஃபி கிடைக்காது.  மாறாக இந்த ரசம் தான் சூடாகக் குடிக்கக் கொடுப்பாங்க. மதியம் பனிரண்டு மணிக்குள்ளாகக் கழிவுகள் வயிற்றை விட்டு வெளியேறியதும் மீண்டும் இந்த ரசம் விட்டுக் கொஞ்சம் போல் குழைவான சாதம் போட்டுக் கரைத்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்வாங்க.  அதுக்கப்புறமா மூணு மணி அளவில் வெயிலில் வைத்து எடுத்த நீரில் குளிக்கச் சொல்லிட்டு கெட்டியாக மோர் சாதம், அல்லது தயிர் சாதம் போடுவாங்க.  தொட்டுக்க மூச்ச்ச்ச்!! அப்போ அந்த சாதமே தேவாமிர்தமா இருக்கும்.  ராத்திரிக்கு 2 அல்லது மூணு இட்லிகள் அதே தயிரோடு சாப்பிடணும்.  மறுநாளைக்கும் உடனடியாக வெங்காய சாம்பாரோடு, உ.கி.கறி வெளுத்துக் கட்ட முடியாது.  எளிமையான சாப்பாடாக பருப்பே இல்லாமல் சமைச்சிருப்பாங்க.  அதைத் தான் சாப்பிடணும்.  அதுக்கப்புறமாத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பருப்பு சேர்த்துப் பின்னர் எண்ணெயில் வதக்கின காய்கள், தேங்காய் சேர்த்தவை எனச் சேர்ப்பார்கள்.  இப்போல்லாம் பேதி மருந்துன்னா என்னன்னே பலருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த ரசம் வைச்சுக் குடிக்கலாம்.  கொஞ்சம் வயிறு சொன்னபடி கேட்டுக்கும். :)))




நான்கு பேர்களுக்கான பொருட்கள்:

சின்ன எலுமிச்சை அளவு புளி(பழைய புளி நல்லது. அதையும் தணலில்(ஹிஹிஹி, கரி அடுப்பில் கரியைப் போட்டுப் பிடிக்க வைச்சால் வருமே அதுக்குப் பேர் தணல்) சுட்டுக்கலாம்.  இல்லையா இரும்புச் சட்டியில் போட்டுப் பிரட்டிக்குங்க.  நீரில் ஊற வைச்சுக் கரைச்சு எடுத்துக்குங்க.  இரண்டு கிண்ணம் தேவை.  ரசம் குடிக்கக் கொடுக்கணுமே, நிறைய வேண்டும்.

மிளகாய் வற்றல் 2

மிளகு இரண்டு டீஸ்பூன்

ஜீரகம் இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒருகைப்பிடி

பெருங்காயம்(தேவையானால், ஒரு சிலர் ஜீரகம் போட்டால் பெருங்காயம் போட மாட்டாங்க)

தக்காளி (தேவையானால்) சின்னது ஒண்ணு

மஞ்சள் பொடி

உப்பு தேவைக்கு

தாளிக்கக் கடுகு, கருகப்பிலை

வறுக்க தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

முதலில் மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, ஜீரகம் போன்றவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.  அதை எடுத்து ஆற வைத்துவிட்டு அந்தச் சட்டியிலேயே கருகப்பிலையைப் போட்டுப் பிரட்டிக் கொள்ளவும். அதையும் ஆற வைக்கவும்.

கரைச்சு வைச்ச புளி ஜலத்தைப் பாத்திரத்தில் விட்டுக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் தக்காளியையும் போட்டுக் கொதிக்க விடவும்.  ஆற வைத்த வறுத்த சாமான்களை நன்கு அரைக்கவும்.  ரொம்பக் கொரகொரப்பும் வேண்டாம்.  அதே சமயம் நைசாகவும் இருக்க வேண்டாம்.  அரைத்த விழுதில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.  புளி வாசனை போகக் கொதித்த ரசத்தில் இந்த விழுது கரைத்த நீரை விட்டு விளாவவும்.  மேலே நுரைத்து வருகையில் அடுப்பை அணைத்துவிட்டு நெய்யில் அல்லது எண்ணெயில் கடுகு தாளித்துக் கருகப்பிலை போடவும். ரசம் ருசி பார்த்துக் கொண்டு தேவையானால் ரொம்பக் கெட்டியாக இருந்தால் நீர் இன்னும் கொஞ்சம் சேர்த்து விளாவலாம்.  ஆனால் பெரும்பாலும் இந்த அளவில் ரசம் கெட்டியாக வராது.  நீர்க்கவே வரும்.