எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, June 30, 2016

உணவே மருந்து! சுண்டைக்காய்!

சுண்டைக்காயை வற்றல் போடுவதற்குச் சாதாரணமாகக் கொஞ்சம் புளித்த மோரைத் தான் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள். ஆனால் மாவடு போட்டபின்னர் மாவடு செலவு ஆனாலும் அதன் தண்ணீர் இருக்கும். அந்த மாவடு ஜலத்தில் சுண்டையை வற்றல் போட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். சுண்டையைக் காம்பு நீக்கி முனையில் கீறி விட்டு மாவடு ஜலத்தில் போடவேண்டும். உப்பெல்லாம் சேர்க்கவே வேண்டாம். அதில் இருக்கும் உப்பே போதும். இரண்டு, மூன்று நாட்கள் நன்கு ஊறியதும் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.

சுண்டைக்காய் வற்றல் குழம்பில் சிலர் வற்றலை வெந்நீரில் நனைத்துச் சேர்க்கின்றனர். இது வற்றலில் இருக்கும் உப்பை மட்டுமே அகற்றும். ஆனால் வற்றல் குழம்பில் சுவையாக இருக்காது. ஆகவே சுண்டைக்காய் வற்றல் குழம்பு செய்யும் முன்னர் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். குழம்புக்குத் தாளிக்க வேண்டியதெல்லாம் தாளித்துக் குழம்புப்பொடியும் உப்பும் சேர்க்கையில் நினைவாக உப்பைக் குறைத்துச் சேர்க்கவேண்டும். குழம்பு கொதி வந்த பின்னர் வறுத்துத் தனியாக வைத்திருக்கும் வற்றலைச் சேர்த்து ஒரு கொதி விட்ட பின்னர் இறக்கி வைக்கலாம். பொதுவாக வற்றல் குழம்பு ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப நீர்க்கவும் இருக்கக் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும்.

சுண்டைக்காயைப் பச்சையாகப் போட்டு சாம்பார் செய்யலாம். சாம்பாரில்  பச்சைச் சுண்டைக்காயை வதக்கிச் சேர்த்து வறுத்து அரைத்து விட்டால் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும். அதே போல் சுண்டைக்காயை வதக்கி வேக விட்டுக் கொண்டு தேங்காய் சேர்த்துக் கொஞ்சம் போல் வெல்லம் போட்டுக் கறியும் செய்யலாம். வாரம் மூன்று நாட்களாவது சுண்டைக்காயை உணவில் சேர்க்க வேண்டும். வயிற்றுப் புண்கள் ஆறும். நீரிழிவினால் ஏற்படும் மயக்கம், படபடப்பு போன்றவைக்கு நல்லது. மலச்சிக்கல் இருக்காது. உடல் சோர்வையும் அகற்றும். ரத்தம் சுத்தம் அடைந்து சிறுநீரகம் சரிவர இயங்கி சிறுநீரைப் பெருக்கி விடும் குணம் படைத்தது சுண்டைக்காய்.

Wednesday, June 29, 2016

உணவே மருந்து! சுண்டைக்காய்!

சுண்டைக்காய் விஷயம்! என்பார்கள் ஒன்றுமே இல்லாததுக்கு. ஆனால் சுண்டைக்காயில் அப்படி விஷயம் இல்லாமல் இல்லை! ஹிஹிஹி, சுண்டைக்காய் விஷயம் என்பது வேறே! சுண்டைக்காயில் உள்ள விஷயங்கள் வேறே! எத்தனை பேருக்குச் சுண்டைக்காய் பிடிக்கும்? கை தூக்குங்க பார்ப்போம்! இந்தச் சுண்டைக்காய் மருத்துவ ரீதியாகவும் பலன் தரும் ஒன்று! சமையலில் அதிகம் பயன்படுத்தினால் மிகவும் நன்மை தரும். முக்கியமாக நீரிழிவு நோய்க்கு நன்மை தரும். இதிலே இரண்டு வகை உண்டு. ஒன்று காட்டுச் சுண்டை! இன்னொன்று நாட்டுச் சுண்டை!


Image result for சுண்டைக்காய்

படத்துக்கு நன்றி வெப் துனியா!


இது கிட்டத்தட்டக் கத்திரிச் செடி போலவே இருக்கும். இலைகள், பூக்கள் எல்லாம் கத்திரிப் பூப் போலவே காணப்படும், ஆனால் செடிகள் கத்திரிச் செடியை விட உயரமாக வளரும். சில செடிகளில் முட்கள் காணப்படும். கொத்துக் கொத்தாகக் காய்க்கும். காட்டுச் சுண்டை கொஞ்சம் கசப்புடன் இருக்கும். நாட்டுச் சுண்டைக்காயில் கசப்புத் தெரியாது. ஆனால் மருத்துவ குணத்தில் இரண்டும் ஒரே மாதிரித் தான்.

வயிற்றுக்கே இதம் தரும் சுண்டைக்காய். தினம் இரவு சுண்டை வற்றலை நல்லெண்ணெயில் வறுத்துச் சாப்பிட்டால் தீராத மலச்சிக்கல் தீரும், வயிற்றுப் பொருமல் இருந்தால் சுண்டைக்காய் வறுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, வேப்பம்பூ, பெருங்காயம், இந்துப்பு, ஓமம் ஆகியவற்றையும் வறுத்துப் பொடி செய்து கொண்டு சூடான சாதத்தில் அரைக் கரண்டி/ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைப் போட்டுக் கொண்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும். வாயுத் தொந்திரவு குறையும். பித்தம் குறையும். வாயில் சுவை தெரியாமல் இருந்தால் தெரிய ஆரம்பிக்கும்.

இந்தச் சுண்டைக்காய் கபம் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். ரத்தம் சுத்தியடையும். கல்லீரல், கணையத்துக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் அருமருந்து. சுண்டைக்காயோடு மிளகு பொடித்துச் சேர்த்துக் கருகப்பிலையும் சேர்த்துக் கஷாயம் செய்து சாப்பிட வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் ஒழியும்.

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம் - வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்!
என்று சுண்டைக்காயைப் பற்றி அகத்தியர் கூறி இருப்பதாக விக்கி பீடியா கூறுகிறது. இந்தப் பாடல் குறித்து நான் அறிந்திருக்கவில்லை. இனி சுண்டைக்காயை வற்றல் போடுவது குறித்தும், பச்சையாகச் சாப்பிடுவது குறித்தும் ஒவ்வொன்றாக அறிவோம்.